அதிகாலையில் காதலியின் வீட்டிற்கு சென்ற கல்லூரி மாணவனை அப்பெண்ணின் தந்தை குத்திக்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் 19 வயதான அனீஷ் ஜார்ஜ். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
கல்லூரி படிப்புடன் மாணவர் அனீஷ் ஜார்ஜ், பேட்டை பகுதியில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலத்தில் பாடகர் குழுவில் பணியாற்றி வந்துள்ளார். அந்த பாடகர் குழுவில் அனீஷ் ஜார்ஜின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சைமன் லாலு என்பவரின் மகளும் சேர்ந்துள்ளார்.
கல்லூரி மாணவர் அனீஷ் ஜார்ஜின் வீடும், சைமன் லாலுவின் வீடும் ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளை கொண்டு இருந்தது. மேலும் பாடகர் குழுவிலும் ஒன்றாக இருப்பதால், கல்லூரி மாணவர் அனீஷ் ஜார்ஜ் மற்றும் பதினொன்றொம் வகுப்பு படித்து வரும் சைமன் லாலுவின் மகள் இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதற்கிடையில் சைமன் லாலுவின் மகளுக்கும் அனீஷ் ஜார்ஜ்க்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அனீஷ் ஜார்ஜ், பதினொன்றாம் வகுப்பு படித்து வரும் தன்னுடைய காதலியை சந்திக்க அவரது வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அங்கு தனது காதலியை அனீஷ் தனியாக சந்திக்க சென்று உள்ளார். வீட்டின் இரண்டாவது மாடியில் உள்ள தனது காதலியின் அறைக்குள் அனீஷ் ஜார்ஜ் சென்றுள்ளார். அப்போது தனது வீட்டில் ஏதே சத்தம் கேட்டதையடுத்து சைமன் லாலு தூக்கத்தில் இருந்து விழித்துள்ளார். அவர் வீட்டின் இரண்டாவது மாடியில் தனது மகள் அறையில் இருந்து சத்தம் வருவதை கேட்டுள்ளார்.
இதையடுத்து திருடன் தான் தனது மகளின் அறைக்குள் நுழைந்துவிட்டான் என கருத்திய சைமன் லாலு கத்தியை எடுத்துக்கொண்டு அந்த அறைக்குள் நுழைந்துள்ளார். அப்போது அதிகாலை 4 மணி. அங்கு இருட்டில் ஒரு நபர் நின்றுகொண்டதை பார்த்த சைமன் லாலு, அனீஷ் ஜார்ஜை திருடன் என கருதி அவரை கத்தியால் குத்தியுள்ளார்.
இதில் அனீஷ் ஜார்ஜ் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்துள்ளார். இதையடுத்து அதிர்ச்சியடைந்த சைமன் லாலு, கல்லூரி மாணவர் அனீஷ் ஜார்ஜை குத்திய கத்தியுடன் பேட்டை போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்து நடந்த விவரத்தை போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து சம்பவம் நடந்த சைமன் லாலு வீட்டிற்கு விரைந்து சென்ற போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டு இருந்த அனீஷ் ஜார்ஜை ஆம்புலன்சில் ஏற்றி திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அனீஷ் ஜார்ஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சைமன் லாலுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனது மகளை அனீஷ் ஜார்ஜ் காதலிப்பதை தெரிந்துகொண்டு அவரை கொலை செய்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இதுகுறித்து போலீசார் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதில் “சைமன் லாலு கூறும் விஷயங்கள் நம்பத் தகுந்ததாக இல்லை. தனது மகள் காதலிப்பதை தெரிந்துகொண்டு வேண்டும் என்றே முன்னரே திட்டம் தீட்டி கத்தியால் குத்திவிட்டு, திருடன் என்று நினைத்து கத்தியால் குத்தியதாக சைமன் லாலு நாடகமாடுகிறார்” என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும் கல்லூரி மாணவர் அனீஷ் ஜார்ஜ் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுவிட்டதாக போலீசார் சென்று கூறிய பின்னரே, அனீஷின் பெற்றோருக்கு தங்களது மகன் வீட்டில் இல்லை என்று தெரியவந்துள்ளது.
பக்கத்து வீட்டில் தனது மகன் கத்தியால் குத்தப்பட்டு உயிருக்கு போராடிய சம்பவம் அறிந்து அனீஷ் ஜார்ஜின் பெற்றோர் கதறித்துடித்தனர். மேலும் சைமன் லாலுவின் வீடு பெரியது என்பதால், மாடியில் பாதி போர்ஷன் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. ஆனால் சம்பவம் நடந்த சமயத்தில் அந்த வீட்டில் வசித்தவர்கள் யாரும் இல்லை என்றும் கூறப்படுகிறது.
இதனால் போலீசாருக்கு திட்டமிட்டு கௌரவ கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. காதலியின் வீட்டிற்குள் அதிகாலை நுழைந்த கல்லூரி மாணவன், பெண்ணின் தந்தையால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.