தமிழகத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு!
By Aruvi | Galatta | Jun 03, 2020, 03:22 pm
தமிழகத்தில் மேலும் 140 பேருக்கு கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னை தவிர, பிற பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாள்தோறும் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை சொற்ப அளவிலேயே உள்ளது. அதாவது கடந்த வாரங்களைக் காட்டிலும், கொரோனாவின் தாக்கம் தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது.
இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று மட்டும் மேலும் 87 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால், செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனாவால் எண்ணிக்கை தற்போது 1,395 ஆக உயர்ந்துள்ளது.
அதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 277 ஆக அதிகரித்துள்ளது.
ஈரோடு மாவட்ட கொரோனா பாதிப்பு பட்டியலில் மேலும் 2 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 2 பேரும், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. .
மேலும், டெல்லியிலிருந்து பொள்ளாச்சிக்கு வந்த மணமகனுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், கடைசி நேரத்தில் அவருக்கு நடைபெற இருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், திருவண்ணாமலையில் நாளை உள்ளூர், வெளியூர் பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் பொது முடக்கம் தொடர்வதால், கிரிவலத்துக்குத் தடை விதித்து திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் 3 வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 1,091 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, தமிழகம் முழுவதும் ஊரடங்கை மீறியதாக 5.73 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கை மீறியதாக இதுவரை 4.43 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், இதுவரை 5.36 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், ஊரடங்கை மீறியவர்களிடமிருந்து இதுவரை 9.76 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகத் தமிழக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.