கொரோனாவிலிருந்து மீண்ட அனுபவங்களை பகிர்ந்த நடிகர் விஷால் !
By Sakthi Priyan | Galatta | July 27, 2020 14:07 PM IST
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்தே வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
இப்படியிருக்க, ஜூலை 25-ம் தேதி மாலை புரட்சி தளபதி விஷால் மற்றும் அவருடைய தந்தை GK ரெட்டிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. 20 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டு, ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்டு முழுமையாகக் குணமடைந்துவிட்டதாகவும் செய்தி வெளியானது. இந்தச் செய்தியை தனது ட்விட்டர் பதிவில் உறுதி செய்தார் விஷால்.
தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டது பற்றி வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார் விஷால். அதில், ஒரு கெட்ட நேரத்தில் இக்கட்டான சூழலில் எப்படி மீண்டு வந்தோம் என்று மற்றவர்களுக்குச் சொல்வதில் எந்த வகையிலும் தவறில்லை. என் தந்தைக்கு முதலில் கரோனா தொற்று உறுதியானது.
நான் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவில்லை. நான் எந்தவொரு மருத்துவமனைக்கும் எதிரானவன் அல்ல, ஆகையால் யாரும் தவறாக நினைக்க வேண்டாம். வீட்டிலேயே தந்தையை கவனித்துக்கொண்டேன். அப்பாவைக் கவனித்து கொள்ளும்போது, எனக்கும் கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அதிகமான காய்ச்சல், சளி, இருமல் இருந்தது. நான் யாரிடமும் இதைச் சொல்லவில்லை. நான் ஆயுர்வேத மாத்திரை எடுத்துக்கொண்டேன். என்னுடைய மேலாளர் ஹிரிக்கும் கொரோனா அறிகுறிகள் தோன்றியது. ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக்கொண்டோம். அதன் மூலம் 4 நாட்களில் காய்ச்சல் குறையத் தொடங்கியது.
7 நாட்களில் முழுமையாகக் குணமாகிவிட்டோம். ஆயுர்வேத மருந்துகள் மூலம் குணமானேன். இதை ஆயுர்வேத மருந்துகள் விற்க வேண்டும் என்பதற்காகச் சொல்லவில்லை. எங்களை என்ன விஷயம் காப்பாற்றியது என்று சொல்வதற்காகவே இந்த விஷயத்தைப் பதிவு செய்கிறேன். மருத்துவருக்கு தான் நன்றி கூற வேண்டும்.
மருத்துவர்களை நான் கடவுளாகப் பார்க்கிறேன். தொற்று ஏற்பட்டாலோ அல்லது வந்துவிடுமோ என்று முதலில் பயப்படாதீர்கள். அதுதான் முதல் மாத்திரை. இந்த பயம் மட்டுமே பாதி பேரை இக்கட்டான சூழலில் கொண்டுபோய் சேர்க்கிறது. கொரோனாவுக்கு முக்கியமான மருந்தே முதலில் பயப்படாதீர்கள். கண்டிப்பாக வைரஸை எதிர்ப்பேன் என்று மனதைரியம் இருக்க வேண்டும். அந்த மனதைரியத்துடன் மருந்துகள் எடுத்து கொண்டால், நிச்சயம் குணமாகலாம். அப்படித்தான் 82 வயது நிரம்பிய என் தந்தை குணமானார்.
அவருடைய மன உறுதியினால் மட்டுமே எனக்கு வந்த தொற்றையும் மன உறுதியுடன் எதிர்கொண்டேன். என் தந்தை, நான், மேலாளர் ஹரி மூவருமே தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்டு குணமடைந்தோம். எங்களால் யாருக்குமே பாதிப்பு இல்லாமல், இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டோம். இந்த வீடியோ எந்தவொரு மருத்துவருக்கோ, மருத்துவத்துக்காகவோ பகிரவில்லை. யாருக்கும் எதிர்ப்பும் தெரிவிக்க இந்த வீடியோவை வெளியிடவில்லை. இன்னொரு மனிதனுக்கு மனிதனாகச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.
விஷால் கைவசம் சக்ரா படம் உள்ளது. விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரித்துள்ளது. எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய ரோலில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது.
Popular actor gets married, leading film stars attend wedding
27/07/2020 12:39 PM
Latest Update on Dhanush's next multistarrer film - Character Look Revealed!
27/07/2020 10:52 AM