படப்பிடிப்பில் நடிகர் விவேக்கிற்கு அஞ்சலி செலுத்திய உதயநிதி !
By Sakthi Priyan | Galatta | April 20, 2021 11:52 AM IST
ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படம் மூலம் ஹீரோவாக கால் பதித்தவர் உதயநிதி. அதைத்தொடர்ந்து இது கதிர்வேலன் காதல், நண்பேன்டா, கெத்து, சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்தார். உதயநிதி நடிப்பில் வெளியான நிமிர், மனிதன், சைக்கோ போன்ற படங்கள் இவரது நடிப்பை உலகிற்கு எடுத்துக்காட்டியது. மசாலா நிறைந்த கமர்ஷியல் படங்கள் செய்தாலும், நடிப்பிற்கு முக்கியதுவம் உள்ள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
அனுபவ் சின்ஹா இயக்கி, தயாரித்து வெளியான படம் ஆர்டிகிள் 15. ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்ட இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் கொண்டாடப்பட்டது. 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 28-ம் தேதி இந்தப் படம் வெளியானது. இதில் ஆயுஷ்மான் குரானா, நாசர், இஷா தல்வார், மனோஜ் பாவ்வா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரீமேக்கை போனி கபூர் கைப்பற்றினார். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார். ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கவுள்ளார். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் தொடங்கியது.
இப்படப்பிடிப்பில் உதயநிதி ஸ்டாலின் நேற்று கலந்து கொண்டார். படப்பிடிப்பு துவங்கும் முன் படக்குழுவினருடன் இணைந்து மறைந்த நடிகர் விவேக்கிற்கு உதயநிதி அஞ்சலி செலுத்தினார். அவருடன் ரெட் ஜெய்ண்ட் நிறுவனத்தின் நிர்வாகிகள் இருந்தனர். இந்தப் படத்தினை போனி கபூர் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து வழங்க, ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
தொடர்ந்து வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்தெடுத்து நடித்து வரும் உதயநிதி, இந்த படத்திற்கு பிறகு மகிழ் திருமேனி இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. உதயநிதி ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார்.
பொள்ளாச்சியில் நடைபெற்றுவரும் #Article15 பட தமிழ் ரீமேக் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். மறைந்த அண்ணன் விவேக் அவர்களின் திருவுருவப்படத்துக்கு படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு மரியாதை செய்தோம். சமூக மாற்றத்துக்காகவும் சுற்றுச்சூழலை காக்கவும் குரல் கொடுத்த அண்ணனின் வழி நடப்போம். pic.twitter.com/fVKAq0xJPa
— Udhay (@Udhaystalin) April 19, 2021