இந்த மோசமான கொரோனா அக்காலகட்டத்தில்  மனிதர்களே படாதபாடு படும்நிலையில்  வன உயிர்களின் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. தொடர்ந்து ஊரடங்கு சமூக பரவல் காரணமாக மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ள இந்த நிலையில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல கோவில்கள் மலைகளிலும் சிறிய குன்றுகளிலும் சில கோவில்கள்  வனப்பகுதியை ஒட்டியவாறும் இருக்கின்றன. 

இதுபோன்ற கோவில்களில் அந்த கோவிலை சுற்றியுள்ள சிறிய வன  பரப்பிலும் அந்த கோவிலை சுற்றியும் பல குரங்குகள் வசிக்கின்றன. அந்தக் குரங்குகள் அனைத்தும் அந்தக் கோவிலை சார்ந்து அந்தக் கோவிலில் இருந்து உணவு தண்ணீர் பெற்று உயிர்வாழ்கின்றன. இந்த நிலையில் கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதாலும்  வெயிலின் காரணமாகவும்  பல இடங்களில் குரங்குகள் தண்ணீர் இன்றி தவிக்கின்றன. 

இந்த நிலையில் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீ 54 ஆஞ்சநேயர் ஆலயத்தில் அந்த ஆலயத்தை சுற்றிலும் அந்த ஆலயத்திலும் 300க்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன. அவற்றுக்கு தேவையான தண்ணீர் மற்றும் உணவு இல்லாததால் வாடி வந்த அந்த குரங்குகளுக்கு உதவும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் ஒரு நற்பணியை முன்னெடுத்து செவ்வனே செய்து முடித்திருக்கிறார்கள். 

கோவிலிலிருந்து குரங்குகளுக்கு எந்தவிதத்திலும் தண்ணீர் குறைவின்றி கிடைக்கும் வகையில் வழிவகை செய்யப்பட்டதுடன் குரங்குகளுக்கு தேவையானவாறு பழங்களையும் வழங்கி உதவி செய்துள்ளனர். அத்துடன் ஆஞ்சநேயர் கோவில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடுகளும் நடத்தியுள்ளனர். இதில் புதுகோட்டை தளபதி விஜய் ரசிகர் மன்ற தலைவர் திரு.பர்வேஸ்  மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். வன உயிர்கள் மீது இவர்கள் காட்டிய இந்த அக்கரையை பலரும் பாராட்டி வருகின்றனர்.