உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பல தொழில்கள் பாதிக்கப்பட்டன. பணிகளை இழந்து பலர் உணவின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது. லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலகட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதில் சினிமாதுறையும் ஒன்று. இதனால் கோடிகளை தங்கள் படங்களில் போட்டு வைத்திருந்த தயாரிப்பாளர்கள் கவலை அடைந்தனர்.

பின்னர் சில தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை ஓடிடி தளங்களில் வெளியிட முடிவு செய்தனர். அதன்படி சில படங்கள் ஓடிடியில் வெளியாகின. அதில் ஒரு சில படங்கள் வெற்றி பெற்றன. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட அனைத்து மொழி படங்களுக்குமே ஓடிடியில் வெளியிடப்பட்டன.

அதன்படி ஓடிடியில் வெளியான முதல் மலையாள படம், சூஃபியும் சுஜாதாயும். கடந்த ஜூலை மாதம் அமேசான் ப்ரைமில் இந்தப் படம் வெளியானது. இதில் ஜெயசூர்யா, அதிதி ராவ் ஹைதாரி, தேவ் மோகன், சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர். இதை இயக்கியவர் நரனிபுழா ஷாநவாஸ். விமர்சன ரீதியாகவும் கலவையான வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில் இயக்குனர் ஷாநவாஸ் தனது அடுத்த படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலையை ஈடுபட்டு வந்தார். இதற்காக அட்டப்பாடி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை ஷாநவாஸுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவருடன் இருந்தவர்கள், கோயமுத்தூரில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்ற தகவல் தெரியவந்தது. செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதாம். அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இச்செய்தி அறிந்த மலையாள திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். 

இந்த லாக்டவுனில் தான் அய்யப்பனும் கோஷியும் பட இயக்குனர் சச்சி மாரடைப்பு காரணமாக காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 2020-ம் ஆண்டு பல திரைப்பிரபலங்களுக்கு ராசி இல்லாத ஆண்டாக அமைந்துள்ளது. கொரோனா பரவல் ஒரு புறம் இருந்தாலும், தொடர்ந்து துக்க செய்திகள் மறுபுறம் உள்ளது. இனி வரும் 2021 வருடமாவது நன்றாக இருக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் இணையவாசிகள்.