சரத்குமார், ராதிகாவுக்கு காசோலை மோசடி வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை !
By Sakthi Priyan | Galatta | April 07, 2021 15:07 PM IST
ராதிகா, சரத்குமார் ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள மேஜிக் ஃப்ரேம்ஸ் என்ற நிறுவனம் 2014ஆம் ஆண்டில் விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை வைத்து இது என்ன மாயம் என்ற படத்தைத் தயாரித்தது. இந்தப் படத்தைத் தயாரிப்பதற்காக ரேடியண்ட் என்ற நிறுவனத்திடமிருந்து மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனம் ஒன்றரைக் கோடி ரூபாயை கடனாகப் பெற்றது.
2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணத்தைத் திரும்பத் தந்துவிடுவதாகக் கூறப்பட்டது. ஆனால், பணத்தைத் தரவில்லை. இது தொடர்பாக அளிக்கப்பட்ட காசோலைகளும் பணமில்லாமல் திரும்பின. இது தொடர்பாக ரேடியண்ட் நிறுவனத்தின் சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இது தொடர்பாக சரத்குமார் மீது ஏழு வழக்குகளும் ராதிகா மீது இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டன. மேஜிக் ஃப்ரேம்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான லிஸ்டன் ஸ்டீஃபன் மீது 2 வழக்குகள் தொடரப்பட்டன. முதலில் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு பிறகு எம்.பி., எம்.எல்.ஏக்களை விசாரிப்பதற்கான நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
வழக்கு விசாரணைக்குவந்தபோது, தாங்கள் பணத்தைத் தரக்கூடாது என நினைக்கவில்லையென்றும் வட்டி கூடுதலாக இருந்ததால் பணத்தை உடனே திரும்பத் தரவில்லையென்றும் மேஜிக் ஃப்ரேம்ஸ் சார்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் சரத்குமார், ராதிகா இருவருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பங்குதாரர் லிஸ்டன் ஸ்டீஃபனுக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
மூன்றாண்டுகளுக்குக் குறைவான சிறை தண்டனை என்பதால், மேல் முறையீடு செய்யும்வரை சிறை தண்டனையை நிறுத்திவைக்க வேண்டுமென சரத்குமார், லிஸ்டன் ஆகியோர் தரப்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மேல் முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசமளித்து இருவரது சிறை தண்டனையையும் நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளது.
ராதிகா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்பதால் அவருக்கு பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதால், அதிலிருந்து மீண்டவுடன் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என அவர் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.