எதார்த்தமான டைமிங் காமெடியால் ரசிகர்களை கவர்ந்தவர் சந்தானம். லொள்ளு சபாவில் நடித்து வந்த நேரத்தில் சிம்புவின் மன்மதன் படம் மூலம் பெரியதிரையில் அறிமுகமானார். ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்து, இயல்பான காமெடியால் மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளார். ஒரு சில படங்களில் ஹீரோக்களுக்கு இணையான கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். 

சந்தானம் முதல் முறையாக ஹீரோவாக நடித்த வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் மட்டும் சந்தானம் காமெடியனாக நடித்தார். ஹீரோவாக நடிப்பது மட்டுமில்லாமல் படங்களை தயாரிக்கவும் செய்தார்.

இன்று சந்தானத்தின் பிறந்தநாளையொட்டி அவர் நடிக்கும் சபாபதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. இந்த படத்தின் படப்பிடிப்பு கும்பகோணம் பகுதிகளில் நடந்து வருகிறது. இந்த படத்தை புதுமுக இயக்குனர் சீனிவாசன் இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் சந்தானம் திக்குவாய் கேரக்டரில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கிறது. 

இதையடுத்து சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் பாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. ஜனவரி 19ஆம் தேதி இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

மேலும் சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் டிக்கிலோனா. இயக்குநர் சினிஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இதில் யோகி பாபு, அனகா, ஷிரின் ஆனந்த் ராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், சித்ரா லட்சுமணன், ஷாரா, அருண் அலெக்ஸாண்டர், நிழல்கள் ரவி, இட் ஈஸ் பிரசாந்த் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும், இந்தப் படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து, தமிழ்த் திரையுலகில் நடிகராக அறிமுகமாகவுள்ளார்.