தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர் நடிகர் விவேக். ரஜினி, விஜய், அஜித், விக்ரம் என முன்னணி நடிகர்கள் முதல் இளம் நடிகர்கள் வரை அத்தனை பேருடனும் இணைந்து நடித்துள்ளார். ஆனால் நடிகர் கமல் ஹாசனுடன் மட்டும் இணைந்து நடிக்கவில்லை. இதற்கிடையே கமலின் இந்தியன் 2 படத்தில் ஒப்பந்தமானார். ஆனால் இதுவே அவரது இறுதி படமாக மாறியிருக்கிறது.

நேற்று மாரடைப்பால் பாதிக்கப்பட்ட விவேக் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் உள்ளிட்ட தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. இதனிடையே சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது. 

அவரது மறைவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியளித்துள்ளது. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் உடல் வைக்கப்பட்டுள்ளது. திரைப்பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், சின்னக்கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய இனிய நண்பர் விவேக் அவர்களுடைய மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. சிவாஜி படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். விவேக்கின் ஆத்மா சாந்தி அடையட்டும் எனத் தெரிவித்துள்ளார்.

திரைப்படங்கள் மூலம் சீர்திருத்த கருத்துகளை பரப்பி வந்த விவேக் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுகிறார். திரைப்படத்தோடு அதை நிறுத்திக் கொள்ளாமல் சுற்று சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு போன்ற சமூக சேவை பணிகளில் ஈடுபட்டுவந்தார்.

மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் கிரீன் கலாம் அமைப்பு மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை இலக்காக வைத்து செயல்பட்டு வந்தார். இதுவரை பள்ளிகள், கல்லூரிகள், கிராமங்கள். சாலையோரங்களில் 33 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு இருக்கிறார்.