புதுக்கோட்டை மன்னர் ராஜகோபால தொண்டைமான், தி ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் என்ற அமைப்பை நிறுவி நடத்தி வருகிறார். இந்த அமைப்பும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்கமும் இணைந்து நடத்திய மாநில அளவிலான 45-வது துப்பாக்கி சுடுதல் போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஆவாரங்குடிபட்டியில் உள்ள புதுக்கோட்டை மகாராஜா துப்பாக்கி சுடும் தளத்தில் கடந்த 29-ந் தேதி தொடங்கியது.

Rajasekar Pandians Family In Riffle Shooting Game

போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 275-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு, பறந்து சென்ற தட்டுகளை துப்பாக்கி தோட்டாக்களால் சுட்டு வீழ்த்தினர். இதில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் மற்றும் மிக்ஸடு ஆகிய 4 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது.

பதக்கங்கள்-சான்றிதழ்கள்

இதில் சர்வதேச வீரரான பிரித்விராஜ் தொண்டைமான் சிங்கிள் டிராப் பிரிவில் 50 தோட்டாக்களுக்கு 49 தோட்டாக்கள் மூலம் பறக்கும் தட்டை சுட்டு வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். இதேபோல டபுள் டிராப் பெண்கள் பிரிவில் புவனா ஸ்ரீ 60 தோட்டாக்களுக்கு 27 தோட்டாக்கள் மூலம் பறக்கும் தட்டை சுட்டு வீழ்த்தி புதிய சாதனை படைத்தார். மாநில அளவிலான இந்த போட்டியில் சிங்கிள் டிராப், டபுள் டிராப், ஸ்கீத் ஆகிய 3 பிரிவுகளிலும் அதிக புள்ளிகளை பெற்று ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதேபோல ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தட்டிச் சென்றது. மிக்ஸடு பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று சென்னை ரைபிள் கிளப் சாம்பியன் பட்டத்தை பெற்றது.

Rajasekar Pandians Family In Riffle Shooting Game

போட்டிகள் முடிந்ததும் பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் தேசிய வீரரும், இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகியும், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவருமான டி.வி.சீதாராமராவ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு தங்க பதக்கம், வெள்ளி பதக்கம், வெண்கல பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள்.

சுழற்கோப்பை

மேலும் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் சிங்கிள் டிராப் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு சுழற்கோப்பையும், ஸ்கீத் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு டி.டி.அப்பாராவ் சுழற்கோப்பையும், டபுள் டிராப் பிரிவில் சாம்பியன் பட்டம் பெற்றதற்கு நாமஸிகண்ணன் சுழற்கோப்பையும், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றதற்கு புதுக்கோட்டை மகாராஜா சுழற்கோப்பையும் தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க தலைவர் டி.வி.சீதாராமராவ், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன், தமிழ்நாடு துப்பாக்கி சுடுதல் சங்க செயலாளர் ரவிகிருஷ்ணன் ஆகியோர் சேர்ந்து வழங்கினார்கள்.

Rajasekar Pandians Family In Riffle Shooting Game

இதை ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப்பின் தலைவர் ராஜகோபால தொண்டைமான், பிரித்விராஜ் தொண்டைமான், ராதா நிரஞ்சனி ராஜாயி உள்ளிட்ட சக அணி வீரர், வீராங்கனைகள் இணைந்து பெற்று கொண்டனர். இதில் ராயல் புதுக்கோட்டை ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் ராஜகோபால தொண்டைமான், பிரித்விராஜ் தொண்டைமான், ராதா நிரஞ்சனி ராஜாயி, திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், ஜமீல், பாகிம் மற்றும் ரைபிள் கிளப் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Rajasekar Pandians Family In Riffle Shooting Game

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சி இ ஓ-வான ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் குடும்பம் மூன்று தலைமுறைகளாக பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது. அவரின் மனைவி சரண்யா ராஜசேகர், மகள்கள் அந்த்ரா ராஜசேகர், உத்ரா ராஜசேகர், அவரின் உறவினரான சம்யுக்தா , மற்றும் அவரின் தந்தை கற்பூர சுந்தரபாண்டியன் ஆகியோர் இந்த துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் கலந்து கொண்டு நிறைய பதக்கங்களை வாங்கி இருக்கிறார்கள். மேலும் ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியனும் இப்போட்டியில் கலந்துகொண்டு மெடல்கள் வாங்கி இருக்கிறார். இவர்களில் 11 வயதில் இருந்தே அந்த்ரா ராஜசேகர் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் வெற்றிபெற்று மாநில அளவில் மெடல்களை வாங்கி இருக்கிறார். மூன்று தலைமுறைகள் கடந்தும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இக்குடும்பம் ஆர்வம் காட்டி வருவது ஆச்சர்யமளிக்கிறது