தமிழ் திரையுலகில் சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவர் சுரேஷ் காமாட்சி. STR வைத்து வெங்கட் பிரபு இயக்கி வரும் மாநாடு திரைப்படத்தை தயாரித்து வருகிறார். தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும், அதை அடியோடு ஒழிக்க பாடுபடும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் பதிவு செய்துள்ளார். 

SureshKamatchi

அதில், இக்கட்டான ஒரு சூழலில் முதல்வரானார். உட்கட்சிப் பூசல், எதிராக நின்ற அத்தனை கட்சிகள்... இடம் வாய்த்ததென சிஸ்டத்தை சரிசெய்ய புதிதாக முளைத்தவர்கள், மத்திய அழுத்தம் என அப்படியொன்றும் இதமான கிரீடமாக இல்லை அவர் ஏற்ற முதல்வர் பதவி..எல்லா அழுத்தத்தையும் தாங்கிக்கொண்டு முதலில் கட்சியை பலப்படுத்தியதோடு இல்லாமல் மாநிலத்தின்மீது தீவிரக் கவனம் செலுத்த ஆரம்பித்தார். சொல் குறைவு... செயல் அதிகம் என இறங்கினார். மழை அதிகமாக வந்தால் எப்படி சமாளிப்பது என முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததிலாகட்டும்... கன்மாய்களை புதுப்பித்தது.. விவசாயத்தை நோக்கி கவனம் வைத்தது.. படிப்படியாக தமிழகத்தை கையிலெடுத்தார் முதல்வர் எடப்பாடி. 

Suresh Kamatchi

சிறந்த செயல்பாடுகள்.. அடுக்கடுக்கான திட்டங்கள்.. என இறங்கியபோது வந்து இடியாக இறங்கியது கொரனா. உடனடியான செயல்பாடுகள்.. இரவு பகலாகத் திட்டமிட்ட முன்னேற்பாடுகள் பல தூக்கமில்லாத இரவுகளைச் சுமந்திருப்பார் முதல்வர் அவர்கள். சரியாக இல்லாதபோது திட்டுகிற நாம்... சரியாக செயல்படும்போது அந்த சிஸ்டத்தை பாராட்டியே ஆக வேண்டும். தமிழகத்தை முழு அடைப்பால் முடக்கினாலும், மக்கள் பசியால் பட்டினியால் வாடிவிடாமல் திட்டமிட்ட விதிமுறைகள். காவலர்களிடம் நடந்துகொண்ட அணுகுமுறை அத்தனையும் இந்த இடர்பான நேரத்தில் சிறப்பாக செயல்பட்டுள்ளார் நம் முதல்வர். 

உடன் பம்பரமாய் சுழலும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும் முதல்வருக்கு மிகுந்த  பக்க பலமாக செயல்படுகிறார். இன்னும் வேகமாகப் பரவும் இந்தக் கொரனாவைக் கட்டுப்படுத்த மக்கள் உணர்ந்து செயல்படுவதே ஆட்சியாளர்கள் எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பலன் தரும். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படாமல் மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் விரைவில் மீண்டுவிடலாம். இப்போதைய நிலையில் ஏற்படும் நிதிப்பற்றாக் குறையை சமாளிக்க பணம் படைத்தவர்கள் முன் வந்து உதவலாம். கொரனா வந்து உயிர் போனால் பணத்தை வைத்து என்ன பண்ண?? 

SureshKamatchi

எத்தனை கோடிகள் வைத்திருந்தாலும் எவ்வளவு புகழ் பெற்றவர்களாக இருந்தாலும் கொரனா வந்துவிட்டால் குணப்படுத்த மருந்து இல்லை அய்யா..இன்று இத்தாலியில் அத்தனை பேரும் பணத்தை தெருவில் கொண்டுவந்து கொட்டிவிட்டு இந்தப் பணம் எங்களைக் காப்பாத்தலை. இதை எடுத்துக்கிட்டு உயிரைக் காப்பாத்துங்கன்னு கதறி இருக்காங்க. அதனால் அரசு இன்னும் பாதுகாப்பு உபகரணங்களை தயார் செய்ய .. பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க பணம்படைத்த அனைவரும் நிதி கொடுக்க முன்வரலாம். கட்சி பாகுபாடின்றி எல்லோரும் இணைந்து பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துங்கள். நம் நாம் தமிழர் தம்பிகளும் இதைச் செய்யுங்கள். அண்ணன் சீமானின் தம்பிகளில் நானும் ஒருவன். நாம் தமிழர் கட்சியில் தீவிர செயல்பாட்டில் உள்ளவன். 

ஆனாலும்... இக்கட்டான நேரங்களில் கைகோர்த்து மனிதர்களாய் நின்று  பேரழிவினை ஏற்படுத்தும்
கண்ணுக்குத் தெரியாத இந்தக் கொரனா கிருமியை ஒழித்துக் கட்ட தீவிரமாகச் செயலாற்றும் முதல்வரைப் பாராட்டி  உடன் நிற்கிறேன். இந்த சமயத்திலும் தொலைக்காட்சி விவாதங்களில் உட்கார்ந்துகொண்டு விவாதங்களை மட்டுமே செய்துகொண்டிருப்பவர்கள் முன்னிற்கும் ஆபத்தான நாட்களை உணர்ந்து செயல்படுங்கள். அதற்குப் பதிலாக அரசு சொல்லும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்களிடம் கொண்டு சேருங்கள். 

வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்... வாட்ஸ் அப்பில் உங்களுக்குத் தெரியாத செய்திகளை அனுப்பி, பயத்திலிருப்பவர்களை மேலும் பதட்டப்படுத்தாமலிருங்கள். இந்த செய்திகளைப் படிப்பதைவிட கொரனா வந்தே செத்திடலாம் போல இருக்கு. தயவுசெய்து அறிவுப்பூர்வமான.. தேவையான செய்திகளை மட்டுமே பகிருங்கள். தன்னுயிர் மதிக்காது இந்நேரம், நேரம் காலம் பாராது சேவை செய்யும் ஒவ்வொரு மருத்துவரையும், செவிலியரையும், காவலரையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை. 

இன்று நாட்டைக் காக்க (மருத்துவம், காவல்)போர்புரியும் போர்வீரர்கள் இவர்கள். இவர்களுக்கு எந்த பாதிப்பும் நேரா வண்ணம் இறையோன் காக்க வேண்டிக் கொள்கிறேன். முதல்வரோடு நின்று இக்கொரனாவை வெல்வோம். மீண்டும் பழைய மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு சீக்கிரம் திரும்புவோம் என்ற நம்பிக்கையோடு வீட்டிலிருப்போம். பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருப்போம் என சுரேஷ் காமாட்சி பதிவு செய்துள்ளார்.