பெரம்பலூர் அருகே கல்லூரிப் பேருந்து மோதி 5 பள்ளி மாணவிகள் படுகாயம் அடைந்தனர்.

பெரம்பலூர் அருகே பள்ளிக்குச் செல்வதற்காகப் பள்ளி மாணவிகள் சிலர் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர். அப்போது, அந்த பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் பேருந்து ஒன்று, குன்னத்திலிருந்து பெரம்பலூர் நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருந்தது.

bus accident

அப்போது, பேருந்து நிறுத்தத்தில் மற்றொரு பேருந்தை, இந்த கல்லூரி பேருந்து முந்திச் செல்ல முயன்றதாகத் தெரிகிறது. இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த மாணவிகள் மீது எதிர்பாராத விதமாக மோதி உள்ளது. 

இதில், செந்தாமரை, கோமதி, சரண்யா, காயத்திரி, அகல்யா உள்ளிட்ட 5 பள்ளி மாணவிகள் படுகாயமடைந்து, ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். இதனையடுத்து, பேருந்து நிறுத்தத்தில் நின்ற மற்ற பயணிகள், படுகாயம் அடைந்த மாணவிகளை பெரம்பலூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், காயத்திரி என்ற 9 ஆம் வகுப்பு மாணவி மட்டும், உயர் சிகிச்சைக்காகத் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

bus accident

மாணவிகள் மீது பேருந்து மோதியது தொடர்பாக அங்குத் திரண்ட பொதுமக்கள், விபத்து ஏற்படுத்திய பேருந்தையும், அந்த பேருந்து சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனத்திற்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட பேருந்துகளையும் பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

bus accident

மேலும், இந்த விபத்தைக் கண்டித்து பொதுமக்கள் பெரம்பலூர் - குன்னம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து விரைந்து வந்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், சம்மந்தப்பட்டவர்களைக் கைது செய்வதாக உறுதி அளித்ததையும் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.