ப.சிதம்பரத்திற்கு மேலும் 5 நாட்கள் சிபிஐ காவல் நீட்டிப்பு!
By Arul Valan Arasu | Galatta | August 26, 2019 17:52 PM IST
ப.சிதம்பரத்திற்கு மேலும் 5 நாள் காவலை நீட்டித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கடந்த வாரம் கைது செய்யப்பட்ட நிலையில், 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், இன்றோடு அவரது காவல் முடிவடைந்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை நாளை பிற்பகல் 12 மணி வரை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.
முன்னதாக, சிபிஐக்கு எதிராக ப.சிதம்பரம் தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு முன் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனிடையே, 5 நாள் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று மாலை, சிபிஐ நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, மேலும் 5 நாட்கள் காவலை நீட்டிக்க சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று, ப.சிதம்பரத்திற்கு மேலும் 5 நாட்கள் காவலை நீட்டித்து, வரும் 30 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, ப.சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்காக மீண்டும் அழைத்துச் சென்றனர்.