கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போன மோகன்லால் படம் !
By | Galatta | April 27, 2021 16:19 PM IST
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. கேரள அரசு திரையரங்குகளை மூட உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த மாதம் வெளியாவதாக இருந்த மோகன்லாலின் திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் பிரமாண்ட திரைப்படம், மரக்கர் - அரபிக் கடலின் டெ சிம்ஹம். சிறந்த திரைப்படம் உள்பட மூன்று தேசிய விருதுகளை இப்படம் வென்றது. ஆம், படம் வெளியாகும் முன்பே சென்சார் முடித்து தேசிய விருதுக்கு படத்தை ப்ரியதர்ஷன் அனுப்பியிருந்தார்.
மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய இந்தப் படத்தை ரமலானை முன்னிட்டு மே 13 வெளியிடுவதாக இருந்தனர். கொரோனா பரவல் தீவிரப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளை மூட கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மராக்கர் அரபிக் கடலின்டெ சிம்ஹம் திரையரங்கில் வெளியாவதற்கான வழியில்லை.
பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் ஓடிடியில் வெளியிடவும் விருப்பமில்லை. இதனால், பட வெளியீட்டை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர். ஆகஸ்டில் மலையாளிகள் முக்கிய பண்டிகையான ஓணம் வருகிறது. அதனை முன்னிட்டு ஆகஸ்ட் 12 படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர்.
இந்த பிரம்மாண்ட படத்தில் மோகன்லாலின் மகன் பிரணவும், ப்ரியதர்ஷனின் மகள் கல்யாணியும் முக்கிய வேடமேற்றுள்ளனர். ஆசிர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் படத்தை தயாரித்துள்ளார்.