கொரோனா பரவல் காரணமாக சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், சில கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு மாபெரும் படைப்பான பொன்னியன் செல்வன் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தின் ராமோஜி பிலிம் சிட்டியில் சிறப்பாக அமைக்கப்பட்ட செட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்காக ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் ஹைதராபாத் விரைந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஹோட்டல் அறையிலிருந்து படப்பிடிப்புத் தளத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும். படப்பிடிப்பு முடிந்தவுடன் ஹோட்டல் அறைக்குச் செல்ல வேண்டும் எனவும் இதற்கிடையில்  வேறெங்கும் பயணிக்கக் கூடாது என்று படக்குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

மேலும், படப்பிடிப்புத் தளத்துக்கு வந்துவிட்டால் பணிகள் அனைத்துமே முடித்துவிட்டுத்தான் வெளியே செல்ல வேண்டும் எனவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முதலில் இந்த பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தாய்லாந்தில் எடுக்கப்பட்டது. திட்டமிட்டபடி சில காட்சிகள் அங்கு 90 நாட்களுக்கு மேல் படமாக்கப்பட்டது. நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் அந்த படப்பிடில் பங்கேற்றனர். 

தாய்லாந்தில் திட்டமிட்டபடி ஷூட்டிங் முடித்த பின்னர், கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மீதமுள்ள கால அட்டவணையை குழு நிறுத்தியது. இதுவரை நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, அமிதாப் பச்சன், மோகன் பாபு மற்றும் ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் ஒரு பகுதியாக நடிகர் ஐஸ்வர்யா ராய் பச்சன் இருப்பதை ஏற்கனவே உறுதிப்படுத்திய குழு, இவர் படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதேபோல, ஆதித்தய கரிகாலனாக நடிகர் விக்ரமும், அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், வந்தியத்தேவனாக கார்த்தியும் நடிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படத்துக்காக 5 பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக 30 நாட்கள் வரை படப்பிடிப்பு நடத்த மணிரத்னம் திட்டமிட்டுள்ளார். நடிகர் கார்த்தியும் ஜெயம் ரவியும் நடிக்கும் காட்சிகள்  ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன. 

தற்போது படத்தில் நடிகர் ரஹ்மான் முக்கிய ரோலில் நடிக்கிறார் என்ற ருசிகர செய்தி வெளியானது. அவர் நடிக்கும் பாத்திரம் குறித்த விவரம் வெளியாகவில்லை. எந்த ரோலாக இருக்கும் என்ற ஆவலில் உள்ளனர் சினிமா விரும்பிகள். 

திட்டமிட்டபடி படப்பிடிப்பு நடைபெற்றால், இத்துடன் சுமார் 70% படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று படக்குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், எடிட்டிங் வேலைகளுக்கு ஸ்ரீகர் பிரசாத் , தோட்டா தரணி தயாரிப்பு வடிவமைப்பை கவனித்து வருகிறார். படத்தின் எழுத்தாளர் ஜெயமோகன்.

மணி ரத்னத்துடன் திரைக்கதைக்கான வரவுகளைப் நடிகர் குமாரவேல் இணைந்து பணியாற்றி வருகிறார். ஒப்பனைக்கு விக்ரம் கெய்க்வாட், ஆடை அலங்காரங்களுக்கு ஏகா லக்கானி ஆகியோர் படக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். படத்திற்கு நடன இயக்குனராக பிருந்தா பணியாற்றிவருகிறார். ஷாம் கவுசல் ஆக்சன் காட்சிகளை இயக்கி வருகிறார். இந்த படத்தை மணி ரத்னம் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. சிவா அனந்த் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.