தமிழ் திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழும் தயாரிப்பாளர் திரு.சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா நிறுவனம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளிவந்து மெகா ஹிட்டான கத்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானது. தொடர்ந்து  பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 2.O உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்து வருகிறது.
 
அடுத்ததாக மீண்டும் ஷங்கருடன் இணைந்துள்ள  லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது தயாரித்து வருகிறது. மேலும்  இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்திய அளவில் அதிக பொருட்செலவில் உருவாகும் பிரமாண்ட திரைப்படமாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கினாலும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனினும் ஊரடங்கு சமயத்தில் பல திரைப்பட தொழிலாளர்களும் வருமானமின்றி நலிவடைந்தனர் தினசரி வருமானத்திற்காக திரைப்பட தொழிலில் ஈடுபட்டு வரும் பல தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பலரும் பெப்சி சங்கத்திற்கு நிதி உதவி அளித்து வந்தனர். 

அந்த வகையில் தற்போது திரைப்படத் தொழிலாளர்களின் நலனுக்காகவும் அவர்களுக்கான நிவாரண பணிகளை செய்வதற்காகவும் பெப்சி நலச் சங்கத்திற்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் அல்லிராஜா சார்பில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை லைக்கா நிறுவனத்தின் CEO திரு.திருக்குமரன் அவர்கள் இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அவர்களை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார். முன்னதாக முதல்வரின் கொரோனா நிவாரண பணிகளுக்காக லைக்கா நிறுவனம் நிதியுதவி வழங்கிய நிலையில் தற்போது பெப்சி தொழிலாளர்களுக்கும் லைக்கா நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.