கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் அசுரன். இதில் தனுஷ் வயதான கேரக்டரிலும் இளம் வயது தோற்றத்திலும் மிரட்டியிருந்தார். டீஜே அருணாச்சலம், கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன், வெங்கடேஷ், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்தார். பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு படம் உருவாகி இருந்தது. அண்ணனை கொன்றவனை தம்பி பழிதீர்க்கும் கதை. படம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியாகி பட்டையை கிளப்பியது. 

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது இப்படம். நடிகர் தனுஷுக்கு முதல் முறையாக, 100 கோடி வசூலை ஈட்டித் தந்த படம், இது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மெகா ஹிட்டான தமிழ் படமும் இதுதான்.  இந்தப் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். ஶ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இதில் மஞ்சுவாரியர் கேரக்டரில், நடிகை பிரியாமணி நடிக்கிறார். தயாரிப்பாளர் தாணுவுடன் இணைந்து சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. கன்னடத்திலும் ரீமேக் ஆக இருக்கிறது. அங்கு சிவராஜ்குமார் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்தப் படம் ரிலீஸ் ஆகி இன்றோடு ஒரு வருடம் ஆகிறது. இதையடுத்து #1YearOfBBAsuran என்ற ஹேஷ்டேக் உருவாக்கி ட்விட்டரில் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். தயாரிப்பாளர் தாணு, இதற்கான காமன் டி.பியை டிவிட்டரில் வெளியிட்டார். படத்தின் மிகப்பெரிய முதுகெலும்பாக திகழ்ந்த இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அதில், மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த படத்தை வெற்றி படமாக மாற்றிய ரசிகர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என பேசியுள்ளார். அசுரன் படத்தை தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கவிருக்கும் D 43 படத்திற்கும் ஜிவி தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பூமணியின் வெக்கை நாவல்தான் அசுரன் படமாகிறது என தகவல் வெளியான போது, அனைவருக்கும் ஒரு விதமான சந்தேகம் இருந்தது. அந்த கதை முழுக்க முழுக்க சிறுவனை மையப்படுத்தி நகரும். இதில் எப்படி தனுஷ் என நினைத்த போது, சிவசாமியை பிரதானமாக்கி சினிமா மொழியில் கதையை மொழியாக்கம் செய்திருந்தார் வெற்றிமாறன். இந்த படத்தை தொடர்ந்து தனுஷ் வைத்து அடுத்த படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். எல்ரெட் குமார் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தையும் இயக்கவிருக்கிறார் வெற்றிமாறன். 

தமிழ் திரையுலகில் தாகம் தீரா கலைஞர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். நடிகர், பாடலாசிரியர், பாடகர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து என்டர்டெயின் செய்து வருகிறார். ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ஜகமே தந்திரம். தனுஷ் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஜோஜூ ஜார்ஜ், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விவேக் ஹர்ஷன் எடிட்டிங் செய்கிறார்.

கலைப்புலி S தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். பரியேறும் பெருமாள் வெற்றிக்கு பின் மாரி செல்வராஜ் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். படத்தில் ரஜீஷா விஜயன் நாயகியாக நடிக்க நடிகர் லால், நட்டி நட்ராஜ், கௌரி கிஷன், லக்ஷ்மி பிரியா, யோகிபாபு ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடிக்கின்றனர்.