கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படம் D43. ஜிவிபிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த பட்டாஸ் படத்தை தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனமே இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் நடிகர் பிரசன்னா முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். க்ரைம் திரில்லரான இந்த படத்தில் ஷரஃபு மற்றும் சுஹாஸ் திரைக்கதை எழுதுகின்றனர்.

சமீபத்தில் படத்தின் பாடல் குறித்து பேசிய ஜிவி பிரகாஷ், D43 படத்திற்கு வேற லெவல் பாடல்கள் கம்போஸ் செய்து ரெடியாகிவிட்டன. பாடல்களை தனுஷ் மற்றும் கவிஞர் விவேக் எழுதியுள்ளனர் என்ற சுவையூட்டும் செய்தியை தெரிவித்திருந்தார். 

நடிகர் தனுஷின் பிறந்தநாளான நேற்று, தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் போன்ற படங்களின் பாடல் மற்றும் மேக்கிங் போன்ற அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. D43 திரைப்படம் பற்றிய எந்த அறிவிப்பும் வராததால், சற்று சோகத்தில் இருந்தனர் ரசிகர்கள். 

இந்நிலையில் ரசிகர் ஒருவர், இப்புடி ஏமாத்திட்டீங்களே ப்ரோ என்று ஜிவி பிரகாஷிடம் கேட்க, அதற்கு பதிலளித்த ஜிவி, ஷூட்டிங் நெருங்கும் போது அப்டேட்டுகள் தரலாம் என்று தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டனர். நிச்சயம் முதல் நாள் படப்பிடிப்பின் போது மாஸ் அறிவிப்பை தருகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் D43 இசை ஆல்பம் குறித்த தரமான அப்டேட்டுகள் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக கால் பதித்தவர் கார்த்திக் நரேன். இவரது இயக்கத்தில் அடுத்ததாக நரகாசூரன் திரைப்படம் உருவானது. சில காரணங்களால் இப்படம் ரிலீஸாகாமல் இருந்தது. இயக்கம் தவிர்த்து கண்ணாடி எனும் படத்தில் சிறிய ரோலில் நடித்திருந்தார். அதன் பிறகு அருண் விஜய் மற்றும் பிரசன்னா வைத்து மாஃபியா எனும் படத்தை இயக்கினார். இந்த படத்தை தொடர்ந்து தனுஷுடன் கைகோர்த்துள்ளார். தனுஷ் எனும் ஆகச்சிறந்த கலைஞனை கார்த்திக் நரேன் எப்படி செதுக்கப்போகிறார் என்ற ஆர்வத்தில் உள்ளனர் திரை விரும்பிகள். 

கொரோனா அச்சுறுத்தல் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் D43 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து மதுரையில் நடக்கவிருக்கும் அத்ரங்கி ரே படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளவிருக்கிறார் தனுஷ்.