புதுப்பேட்டை:15ஆண்டுகள் கடந்தும் தீராத எதிர்பார்ப்பு!-மனம் திறந்த செல்வராகவன்!
By Anand S | Galatta | May 26, 2021 20:53 PM IST
தனித்துவமான திரைப்படங்களை கொடுப்பதில் இயக்குனர் செல்வராகவனுக்கு நிகர் செல்வராகவன் மட்டுமே. துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக களம் இறங்கிய செல்வராகவன் தொடர்ந்து காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன என தனக்கே உரித்தான பாணியில் சிறந்த திரைப்படங்களை கொடுத்து தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கிறார்.
செல்வராகவன் ஒவ்வொருமுறை கையாளும் கதைக்களமும் அதை நகர்த்தும் கதாபாத்திரங்களின் ஆழமும் வசனங்களில் இருக்கும் எதார்த்தம் நிறைந்த அழுத்தமும் பார்வையாளர்களை படத்தில் ஒரு கதாபாத்திரங்களாக நகர வைக்கின்றனர். இயக்குனர் செல்வராகவனின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்த புதுப்பேட்டை ,கடந்த 2006ம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்தது. புதுப்பேட்டை திரைப்படம் வெளியான சமயத்தில் வர்த்தக ரீதியில் மிகப்பெரிய வெற்றியைத் தராமல் போனாலும் அதற்கடுத்த இந்தப் பதினைந்து ஆண்டுகளில் பலரின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கிறது.
லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தில் நடிகர் தனுஷ், நடிகை சினேகா, சோனியா அகர்வால், பாலாசிங் உள்ளிட்ட பலர் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.யுவன் இசையில் படத்தில் உள்ள அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும் கோலா பாஸ்கரின் படத்தொகுப்பும் திரைப்படத்தின் மற்றொரு பலம். இன்றோடு புதுப்பேட்டை திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்துள்ள நிலையில் இன்றும் புதுப்பேட்டை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் புதுப்பேட்டை 2 பற்றி ஒரு பேட்டியில் பேசிய செல்வராகவன் புதுப்பேட்டை 2 கதை எழுதி முடிக்கப்பட்டது என தெரிவித்துள்ளார். நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசையில் உள்ளதால் விரைவில் புதுப்பேட்டை 2 தயாராகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகளை கடந்த நிலையிலும், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பிற்கு எந்த குறையும் இல்லாமல் இருப்பதால் ரசிகர்கள் விரும்பும்படி விரைவில் புதுப்பேட்டை 2-ல் கொக்கி குமாரின் வருகையை நாம் எதிர்பார்க்கலாம்.
And the journey shall continue 🙏🙏@dhanushkraja @thisisysr @Arvindkrsna @kabilanchelliah pic.twitter.com/KVZ9ihfrrR
— selvaraghavan (@selvaraghavan) May 26, 2021