கனடா நாடாளுமன்றம் கலைப்பு! ஜஸ்டின் ட்ருடோ அதிரடி
By Arul Valan Arasu | Galatta | September 12, 2019 12:34 PM IST
கனடா நாடாளுமன்றத்தினை கலைத்து பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ உத்தரவிட்டுள்ளார்.
கனடா நாட்டின் பிரதமராகக் கடந்த 2015ஆம் ஆண்டு முதல், ஜஸ்டின் ட்ருடோ இருந்து வருகிறார். இதனிடையே, ஜஸ்டின் ட்ருடோ தலைமையிலான அரசு மீது கடந்த பிப்ரவரி மாதம் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, கனடா நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கொண்டுவரப்பட்டது. இதில், ஜஸ்டின் ட்ருடோ கட்சிக்கு 34.6 சதவீதம் மட்டுமே ஆதரவு கிடைத்தது. இதனால், ஆட்சி நடத்த போதிய ஆதரவு இல்லாததால், ஜஸ்டின் ட்ருடோ தலைமையிலான அரசு தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால், கனடா நாடாளுமன்றத்தினை கலைத்து, பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ உத்தரவிட்டார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஜஸ்டின் ட்ருடோ, “கனடாவில் 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைந்து உள்ளதாகவும், தற்போதைய காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியானது எதிர்பார்த்த அளவை விடச் சற்று அதிகம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கனடாவில் அக்டோபர் 21 ஆம் தேதி, பொதுத்தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறினார்.
கனடா நாட்டில் சிறுபான்மை அரசுகள் 18 மாதங்களுக்கு மேல் ஆட்சியில் நீடிப்பது என்பது மிக அரிது செயல் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 2 வது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் ஜஸ்டின் ட்ருடோ ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.