உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகிறது. முயற்சிகள் ஒருபுறம் இருக்க, வைரஸின் தாக்கம் வேகமாக இருக்கிறது. இந்த தொற்று காரணமாக உயிரிழப்போர் எண்ணிக்கையும் உயர்ந்துகொண்டே வருகிறது. 

தினசரி செய்தி சேனல்களை ஆன் செய்தால் கொரோனா பற்றிய செய்திகள் தான் அதிகம். இது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அனைத்து தரப்பினரும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தியாவில் திரும்பும் பக்கம் எல்லாம் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பேச்சாக தான் உள்ளது. 

நடிகை சாந்தி கிருஷ்ணா, 1981-ம் ஆண்டு வெளியான சிவப்பு மல்லி என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்தப் படத்தை ராம நாராயணன் இயக்கி இருந்தார். விஜயகாந்த், சந்திரசேகர் உள்பட பலர் நடித்திருந்தனர். இதையடுத்து பிரதாப் நடித்த, பன்னீர் புஷ்பங்கள், விசுவின் மணல் கயிறு, கமல்ஹாசனின் சிம்லா ஸ்பெஷல், விஜய், சூர்யா நடித்த நேருக்கு நேர் உள்பட பல படங்களில் நடித்தார். தமிழை விட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்தார். 

மலையாள நடிகர் ஶ்ரீநாத்தை 1984 ஆம் ஆண்டு திருமணம் செய்தார்.பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 1995 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். சாந்தி கிருஷ்ணாவின் சகோதரர்தான், இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. தமிழில் கமலின் சத்யா, ரஜினியின் சூப்பர் ஹிட் படமான பாட்ஷா, அண்ணாமலை உள்பட பல படங்களை இயக்கியவர். 

நடிகை சாந்தி கிருஷ்ணாவின் தந்தை ஆர். கிருஷ்ணா. இவர் பெங்களூரில் வசித்து வந்தார். இவருக்கு சிறுநீரகப் பிரச்னை இருந்து வந்தது. இதற்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன், கொரோனா வைரஸ் பாதிப்பும் அவருக்கு ஏற்பட்டது. அதற்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

அவருக்கு வயது 92. கோவிட்-19 வழிகாட்டுதல்படி அவர் இறுதிச் சடங்கு நேற்று நடந்தது. இதையடுத்து திரையுலக பிரமுகர்கள் மற்றும் உறவினர்கள் நடிகை சாந்தி கிருஷ்ணாவுக்கும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவுக்கும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பிரச்சனை எப்பொழுது தீரும், இந்த 2020ம் ஆண்டு எப்பொழுது முடியும் என்று மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா வைரஸால் பலர் உயிரிழந்துள்ளனர், பலர் வாழ்வாதாரங்களை இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஊரடங்கை தகர்த்தாலும், இந்த வைரஸ் முற்றிலும் இல்லாமல் இருந்தால் தான் மக்களுக்கு இயல்பு நிலை.