கன்னட திரை உலகில் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது மற்றும் விற்பனை செய்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விவகாரத்தில் கன்னட திரை உலகை சேர்ந்த 15 நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் தெரிவித்திருந்தார். 

அதன்படி, விசாரணை நடத்திய போலீசார் நடிகை ராகிணி திவேதியை கடந்த 4-ந் தேதி கைது செய்தனர். இதுதவிர நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், ராகிணி திவேதியின் நண்பர் ரவிசங்கர், வீரேன் கண்ணா, ப்ரீத்வி ஷெட்டி, லோயம் பெப்பர் சம்பா, பிரசாந்த் ரங்கா, நயாஷ் உள்ளிட்டரை கைது செய்துள்ளனர். மேலும் நேற்று முன்தினம் போதைப்பொருள் விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக நடிகை சஞ்சனா கல்ராணியும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி உள்பட 14 பேர் மீது காட்டன் பேட்டை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 
போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்காக எந்தெந்த விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டீர்கள்?, போதைப்பொருட்களை சப்ளை செய்தவர்கள் யார்?, விருந்து நிகழ்ச்சிகள் யாரெல்லாம் கலந்து கொண்டார்கள்?. போதைப்பொருள் விவகாரத்தில் கன்னட திரை உலகத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் யாருக்கு எல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து நடிகைகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. 

இதையடுத்து, நடிகைகள் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதாக கூறப்படும் ரெசார்ட் ஓட்டல்களின் உரிமையாளர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டிருக்கும் சஞ்சனா கல்ராணியிடம், விசாரணைக்காக ரத்த மாதிரிகளை கொடுக்குமாறு கேட்டுள்ளனர். மருத்துவ பரிசோதனைக்கு மறுத்த சஞ்சனா, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், எனக்கு காவல்துறையினர் மீது நம்பிக்கை போய்விட்டது. இப்போது நான் எனது ரத்த மாதிரிகளை கொடுத்தாலும், அதை வைத்து பரிசோதனை செய்யப்படுமா, என் ரத்ததின் முடிவுகள்தான் வருமா என எனக்கு சந்தேகம் இருக்கிறது என அவர் வாக்குவாதம் செய்துள்ளார்.