போலி கணக்கு உருவாக்கி மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது போலீசில் புகாரளித்த நடிகர் வினீத் !
By Sakthi Priyan | Galatta | November 06, 2020 13:35 PM IST
மலையாள சினிமாவில் இடநிலங்கள் என்ற படத்தின் மூலம் 1985-ம் ஆண்டு அறிமுகமானவர் வினீத். இதன் பின்னர் ஏராளமான மலையாள படங்களில் நடித்த இவர், தமிழில் ஆவாரம்பூ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஜென்டில்மேன், புதிய முகம், ஜாதிமல்லி, மே மாதம், காதல் தேசம், நந்தினி உள்பட ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ளார். இது தவிர இந்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். சிறந்த பரதநாட்டிய நடன கலைஞரான இவர் நடன பள்ளியும் நடத்தி வருகிறார்.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் சந்திரமுகி படத்தில் இவர் நடித்த கேரக்டர் பேசப்பட்டது. கடைசியாக இவர் ராஜீவ் மேனன் இயக்கிய சர்வம் தாளமயம் படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் பிரபல ஹீரோவாக நடித்து வந்த இவர், ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். தற்போது மீண்டும் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சில நடனக் கலைஞர்களுக்குக் கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ்ஆப் கால் மூலம் ஒரு அமெரிக்க எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. தான் நடிகர் வினீத் என்று கூறிய அந்த நபர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட சில நாடுகளில் நடனப் பள்ளியைத் தொடங்க இருப்பதாகக் கூறினார். அதில் நடனக் கலைஞர்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்பு இருப்பதால் பணம் கொடுத்தால் வேலை வழங்குவதாகக் கூறியுள்ளார். குரல் வினீத் போலவே இருந்ததாலும், அமெரிக்காவிலுள்ள நம்பரிலிருந்து அழைப்பு வந்தாலும் அவர்கள் நம்பியுள்ளனர். ஆனாலும் சிலர் இதை உறுதி செய்வதற்காக அந்த நம்பரில் திரும்ப அழைத்தபோது கிடைக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஒருவர் வினீதுக்கு நெருக்கமான சிலரிடம் விவரத்தைக் கூறினார். இதையடுத்து உடனடியாக அவர்கள் வினீதிடம் தகவல் தெரிவித்தனர். அப்போது தான் தன்னுடைய பெயரில் மோசடி நடந்து வருவது குறித்து வினீதுக்கு தெரியவந்தது.
இதையடுத்து அவர் கேரள டிஜிபியிடம் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இதுபோன்ற மோசடியில் யாரும் ஏமாறக்கூடாது என்பதற்காகவே தான் போலீசில் புகார் செய்ததாகவும், அனைவரும் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்றும் நடிகர் வினீத் கூறியுள்ளார்.