Thambi Movie Cast & Crew
இயக்குனர் ஜீத்து ஜோஸஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், நிகிலா விமல், இளவரசு, சௌகார் ஜானகி ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்த படம் தம்பி. பாபநாசம் வெற்றிக்கு பிறகு குடும்பத்தை அடித்தளமாய் கொண்டு களமிறங்கியுள்ளார் இயக்குனர்.
சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறு வயதில் தனது குடும்பத்தை விட்டு பிரியும் கார்த்தி, பதினைந்து வருடங்கள் கழித்து மீண்டும் குடும்பத்துடன் இணைகிறார். பொறுப்புள்ள அக்கா ஜோதிகாவின் தம்பியாக நுழையும் கார்த்தி அங்கு என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கிறார் ? நிஜத்திலே அவர் தான் தம்பியா அல்லது அந்நியரா ? என்பது தான் இந்த படத்தின் கதைக்கரு. இதை சில ருசிகர ட்விஸ்டுகளுடன் எடுத்துரைத்துள்ளார் இயக்குனர்.
மேட்டுப்பாளையத்தில் செல்வாக்கு மிகுந்த அரசியல் வாதியாக இருக்கிறார் ஞானமூர்த்தி(சத்யராஜ்). இவரது இளைய மகனாக வீட்டிற்குள் நுழைகிறார் சரவணன்(கார்த்தி). குடும்பத்தின் மூத்த மகளாக டியூஷன் டீச்சராக இருக்கிறார் பார்வதி(ஜோதிகா).
முதல் பாதியில் நாம் பார்த்து ரசிக்கும் நகைச்சுவை மன்னன் கார்த்தியை நிறைய இடங்களில் காண முடிகிறது. அஸ்வந்துடன் சேர்ந்து அசத்தும் ஒன்-லைன் பலே. சௌகார் ஜானகியுடன் சிலுமிஷம் செய்யும் பேரனாகவும், நிகிலாவுடன் லீலைகள் செய்யும் மாமனாகவும் கேரக்டரில் கச்சிதமாக பொருந்தியிருந்தார் கார்த்தி. அமைதியாக அசத்திவிட்டு சென்றுள்ளார் நடிகை ஜோதிகா. ஓவர் டோஸ் முகபாவனைகள் ஏதும் முயற்சிக்காமல் சரியாக அந்த பாத்திரத்தில் ஐக்கியமாகி நடித்திருந்தார் ஜோ. இனி சில நாட்களுக்கு நிகிலா கனவுகன்னியாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. வயது வெறும் எண் என்பதை நிரூபித்துள்ளார் நடிகை சௌகார் ஜானகி. குடும்பத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அன்பு நிறைந்த அப்பாவாக கதை முழுக்க வந்துள்ளார் சத்யராஜ்.
இயல்பான முதல் பாதி சென்றாலும், பல ட்விஸ்டுகளுடன் இரண்டாம் பாதியை சமர்ப்பித்துள்ளார் இயக்குனர். சண்டை காட்சிகள் சற்று தூக்கலாக இருந்தாலும் கதையின் ஓட்டத்திற்கு சரியாக இருந்தது. கோவிந்த் வசந்தாவின் மனம் வருடும் இசை படத்திற்கு பக்கபலம். குறிப்பாக தாலேலோ பாடல் இதயத்தில் சர்க்கரை தெளித்தது போல் இருந்தது. சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கு ஏற்ற பின்னணி இசையை அளித்திருந்தார். கோவா, மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர் போன்ற கண்களுக்கு இதமான பகுதிகளை தன் மூன்றாம் கண் மூலம் படம்பிடித்து ஃபிரேமில் செதுக்கியுள்ளார் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர்.
சஸ்பென்ஸ் திரில்லர் கதை இயக்குனர் ஜீத்து ஜோஸஃபின் ஹோம் கிரௌண்ட் என்றே கூறலாம். நிச்சயம் இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். சில இடங்களில் இப்படியா என்று யோசிக்க வைக்கும். ரென்சில் டி.சில்வா மற்றும் சமீர் அரோரா போன்ற எழுத்தார்களின் பேனாக்களை முத்தமிட வேண்டும். ரசிகர்கள் நாடியறிந்து கதையை எழுதியுள்ளனர். குறைந்த பட்ஜெட்டில் தரமான படைப்பை தர இயலும் என்பதற்கு இந்த தம்பி ஒரு எடுத்துக்காட்டு.
Verdict: தம்பியுடையான் படைக்கு அஞ்சான்