Psycho Movie Cast & Crew
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் சைக்கோ.மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்.
பெண்களை கடத்தி கொலைசெய்யும் சைக்கோ கொலைகாரன் ஒருவன் கோயம்பத்தூரில் பிரபல RJவாக இருக்கும் அதிதி ராவ் ஹைதாரியை கடத்துகிறார்.இவரை ஒருதலையாக காதலிக்கும் பார்வையற்றவரான உதயநிதி ஸ்டாலின் அதிதியை காப்பற்றும் முயற்சியில் இறங்குகிறார்.சைக்கோ கொலைகாரனிடம் இருந்து அதிதியை உதயநிதி காப்பாற்றினாரா இல்லையா என்பது மீதிக்கதை.
கதையின் நாயகன் கௌதமாக உதயநிதி ஸ்டாலின் பார்வையற்றவராக தனது பணியை சிறப்பாக செய்துள்ளார்.அதிதி மீது காதல் கொண்டு அவரை பின்தொடரும் ரொமான்ஸ் காட்சியானாலும் ,அதிதியை கண்டுபிடிக்க போராடும் காட்சிகளிலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அதிதி ராவ் ஹைதாரி சைக்கோ கொலைகாரனிடம் சிக்கி தவிக்கும் அப்பாவி பெண்ணாக நடிப்பில் அசத்தியிருக்கிறார்.நித்யா மேனன் முன்னாள் போலீசாக வந்து உதயநிதிக்கு உதவும் காட்சிகளில் மிகவும் அழகாக நடித்துள்ளார்.நித்யாமேனனின் அம்மாவாக வரும் ரேணுகா தனக்கு கொடுக்கப்பட்ட பணியை மிகவும் அழகாக செய்துள்ளார்.
சிங்கம்புலியின் ஒன்லைனர்கள் ரசிக்கும்படி இருந்தன.நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிகராகவும் தனது பணியை சிறப்பாக செய்துள்ளார் சிங்கம்புலி.இன்ஸ்பெக்டராக வரும் இயக்குனர் ராமிற்கு பெரிதாக படத்தில் வேலையில்லை.படத்தின் வில்லனாக வரும் சைக்கோ நடிகர் திரையில் வரும் ஒவ்வொரு சீனிலும் நம்மை பதைபதைக்க வைக்கிறார்.
மிஸ்கின் தனது சினிமா காதலின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வித்தியாசமான கதைகளை ஒவ்வொரு படத்திலும் கொடுத்து வருகிறார்.தனது விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் ரசிகர்களுக்கு ஒரு செம திரில்லர் படமொன்றை கொடுத்துள்ளார்.சைக்கோ கதையாக இருந்தாலும் அந்த கேரக்டர் ஏன் அப்படி ஆனது எனபதற்கு விளக்கத்தை கொடுத்து இறுதியில் அவர்கள் அப்படி ஆவதற்கு என்ன காரணம் என்பதையும் தெரிவித்துள்ளார்.சில இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைக்கதை வலுவாக உள்ளதால் அது படத்தின் ஓட்டத்தை பாதிக்காது.
தமிழ் சினிமாவுக்கு பழக்கபடாத கதைக்களம் என்றாலும் அதை வெற்றிகரமாக கையாண்ட மிஷ்கினுக்கு பாராட்டுக்கள்.ஒரு கட்டத்திற்கு மேல் போலீஸ் என்ன ஆனார்கள் என்பதே தெரியவில்லை அதோடு கொலைகாரன் குறித்த அனைத்து விஷயங்களையும் ஹீரோவே கண்டுபிடிப்பது உள்ளிட்ட சில லாஜிக் மீறல்களை சரி செய்திருந்தால் இந்த படம் இன்னும் விறுவிறுப்பான ஒரு படமாக இருந்திருக்கும்.
இளையராஜா இசையில் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது திரில்லர் படத்திற்கு தேவையான ரீ-ரெகார்டிங் வேலைகளை கட்சிதமாக செய்துள்ளார்.எந்த இடத்தில் இசை வரவேண்டும் எந்த இடத்தில இசைதேவையில்லை என்று அறிந்துள்ளார்.படத்தின் மிகப்பெரிய பலமாக இசைஞானி இருக்கிறார்.பாடல்கள் படத்தில் இடம்பெற்ற இடங்கள் மிகவும் பொருத்தமாக இருந்தன.உன்ன நெனச்சு பாடல் ரசிகர்களுக்கு இளையராஜாவின் மற்றுமொரு தாலாட்டாக அமைந்துள்ளது.
தன்வீர் மிர் தனது முதல் படம் எனபதுபோல் இல்லாமல் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்துள்ளார்.மிஸ்கின் படங்களுக்கே உரிய அக்மார்க் ஷாட்கள் இந்த படத்திலும் உள்ளன.படத்தில் கொடூரம்,கோரம் அனைத்தும் இருந்தாலும் வில்லனிடம் இருந்து ஹீரோ எப்படி ஹீரோயினை காப்பற்றப்போகிறான் என்ற பதைபதைப்பு அனைவருக்கும் வருகிறது.
Verdict: ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு விறுவிறுப்பான சைக்கோ திரில்லர் கதையை நமக்கு கொடுத்திருக்கிறார் மிஸ்கின்