Ponmagal Vandhal Movie Cast & Crew
அடர்ந்த ஊட்டி காடுகளில் உறைய வைக்கும் பனி மூட்டத்துடன் கதை துவங்குகிறது. ஓர் சின்ன குழந்தையை ஜோதி என்கிற பெண் கடத்திவிட்டதாகவும், காப்பாற்றப்போன இரண்டு இளைஞர்களையும் அவள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதால் அந்த சைக்கோ ஜோதியை தேடி வருவதாகவும் போலீஸார் கூறுகின்றனர். பெண் குற்றவாளி எங்களைச் சுட்டதால், எங்கள் தற்காப்பிற்காக பதில் தாக்குதல் செய்தோம் என்று சைக்கோ ஜோதியின் கேஸை கிளோஸ் செய்கின்றனர் காவல் அதிகாரிகள். 15 ஆண்டுகள் ஆகியும் இந்த மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்த்து, நீதிக்காகப் போராடும் ஒரு பெண் வழக்கறிஞர் கதையே பொன்மகள் வந்தாள்.
உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வழக்கைக் கையில் எடுக்கிறார் பெட்டிஷன் பெத்துராஜின் மகளான வழக்கறிஞர் வெண்பா (எ) ஜோதிகா. ஒரு கொலைகாரிக்கு வக்காலத்து வாங்குவதா ? பப்ளிசிட்டிக்காக இதை செய்கிறாள் என வெண்பாவை அவமானப்படுத்துகின்றனர் அந்த ஊர் மக்கள். பல அவமானங்களைத் தாண்டி இந்த வழக்கைக் கையில் எடுக்கிறார் வெண்பா. இந்த வழக்கை வெண்பா எப்படி கையாளுகிறார் ? எதிர் வாதங்களை எப்படி சமாளிக்கிறாள் என்றே கதை நகர்கிறது.
ஜோதிகாவின் நடிப்பை பற்றி கூற வேண்டுமென்றால், வழக்கமாக ஜோதிகாவை ஓவர் ஆக்ட்டிங் ஹீரோயின் என்று கேலி செய்வார்கள். கேலி கிண்டல்களை கடந்தால் தானே நடிகர்கள் நட்சத்திரங்களாக மாறுகிறார்கள். அழுகை, வலி, உறுதி, துணிச்சல், அன்பு என உணர்வுகளை உன்னதமாக திரையில் கொண்டு வந்துள்ளார் ஜோ. வழக்கறிஞர் பாத்திரத்திற்கு ஏற்றார் போல் உடல் மொழி மற்றும் வசனங்களை வரிசைப்படுத்தும் விதம் என கேரக்டருக்கு ஃபிட் ஆகியிருந்தார். ஷீரோ சப்ஜெக்ட் கொண்ட ஸ்கிரிப்ட்டுகளில் கச்சிதமாக பொருந்துகிறார் ஜோ.
பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன், பிரதாப் போத்தன் என இயக்குனர்களின் ரீயூனியன் போல் திகழ்கிறது. எதிர்த்தரப்பு வழக்கறிஞர் ராஜரத்னமாக வரும் பார்த்திபன் கூலான முறையில் அவரின் உடல் மொழி சேர்த்து நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குண்டக்க மண்டக்க என டயலாக் மாடுலேஷனால் ஸ்கோர் செய்கிறார். கேட்குறதுக்கு ஒண்ணுமில்ல, சொல்றதுக்கு ஒண்ணு இருக்கு ! என்று அவரது ஸ்டைலில் பேசும் வசனங்கள் சபாஷ். நடிகர் பாண்டியராஜனுக்கு பெரிய அளவில் ரோல் இல்லையென்றாலும் முட்டை கண்களால் முகபாவனைகள் காட்டுகிறார். சுப்பு பஞ்சு, வினோதினி, வித்யா பிரதீப், கஜராஜ், ஆஷிக் போன்றோரின் நடிப்பு படத்திற்கு வலு சேர்க்கிறது.
ராம்ஜியின் ஒளிப்பதிவு ஊட்டியை கண் முன் நிறுத்துகிறது. DI எனப்படும் தொழில்நுட்ப அணி சற்று கலர் பணிகள் செய்திருந்தால் கூடுதல் அழகை சேர்த்திருக்கும். மாஸ் படங்களுக்கு தேவையான எடிட்டிங், கிளாஸ் படங்களுக்கு தேவையான எடிட்டிங் என தெரிந்து வைத்திருக்கிறார் ரூபன். அதிக பின்னணி டோஸ் ஏற்றாமல் கதைக்கு தேவையான இசையை வழங்கியுள்ளார் கோவிந்த் வசந்தா. இரண்டு மெலடி பாடல்கள் சொக்க வைக்கிறது.
நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை திரை வடிவில் கூற தனித்தெம்பு வேண்டும். அதை முதல் படத்திலே செய்திருக்கிறார் இயக்குனர் ஜேஜே ஃப்ரட்ரிக். பசிக்காக ஒரு கை அரிசியைத் திருடுனவன்னை அடிச்சுக் கொன்ன இதே நாட்டுலதான் 100 பேரை பலாத்காரம் பண்ணவங்க, அதை வீடியோ எடுத்தவங்கள்லாம் ஜாலியா வெளியே சுத்திக்கிட்டு இருக்காங்க என்னும் இந்த வசனமே போதும், சமூக பிரச்சனைகளை கண் முன் பிரதிபலிக்க... குட் டச், பேட் டச் போன்ற விஷயங்களை பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு கற்றுத்தரவேண்டும் எனும் காட்சியை படத்தில் முன்வைத்த விதம் அற்புதம்.
ஒரு வீட்டில் பெண் குழந்தை எப்படி நடந்துகொள்ள வேண்டும், உடை உடுத்த வேண்டும் என்று கற்றுத்தரும் பெற்றோர்கள்... அதே வீட்டில் உள்ள பசங்களுக்கு பெண்களை எப்படிப் பார்க்க வேண்டும், எப்படி மதிக்க வேண்டும் என்று கற்றுத்தந்தால் நன்றாக இருக்கும் எனும் கருத்தூசியை செலுத்தியுள்ளார் இயக்குனர். எமோஷனல் காட்சிகளை அழுத்தமாக வைத்திருக்கலாம். கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்னாள் வரும் காட்சிகள் வேகமாக முடிக்கப்பட்டது போல் சிலருக்கு படலாம். கிளைமேக்ஸுக்குள் ஒரு கிளைமேக்ஸ், ஹாலிவுட் பாணியில் துப்பறியும் முறை போன்ற பிசிறுகள் இருந்தாலும் குழந்தை கடத்தல், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறை என ஸ்ட்ராங்கான உள்ளடக்கத்தை பெற்றுள்ளது இப்படம்.
நீதிக்கு கால அவகாசம் தேவையில்லை....கண்ணீர் துடைக்க காரணம் தேவையில்லை...
Verdict: பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை போக்கவே இந்த பொன்மகள் வந்தாள்