Nenjuku Needhi Movie Cast & Crew
வீதிக்கு வீதி சாதி...அதை உடைத்தெறியுமா இந்த நெஞ்சுக்கு நீதி என்ற ஆவலில் படத்தை காண தயாரானோம். பல்வேறு உண்மைச் சம்பவங்களை இணைத்து இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். தலித் சிறுமிகள் இருவரை வன்புணர்வு செய்து, கொன்று தூக்கில் போட்டு விடுகிறார்கள் ஆனால், ஆணவக்கொலை என்று சித்தரிக்கப்பட்டு அவர்களது பெற்றோரே கைது செய்யப்படுகிறார்கள். இப்பகுதி IPS காவல் அதிகாரி விஜயராகவனாக வருகிறார் உதயநிதி. இதை யார் செய்தது என்பதைக் கண்டறிந்து தண்டனை வாங்கிக்கொடுக்க முடிகிறதா? இறுதியில் நீதி கிடைக்கிறதா என்பதே இந்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் கதைக்கரு.
ஆர்டிகள் 15 எனும் பாலிவுட் படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக்காகும் இந்த நெஞ்சுக்கு நீதி. ரீமேக்கை நாசமாக்கிய பல க்ரிஞ் படைப்புகளை தமிழ் சினிமா ரசிகர்கள் கண்டதுண்டு. ஆனால் இந்த நெஞ்சுக்கு நீதி சீரான படைப்பாக, நெஞ்சை தொடும் படைப்பாக தனித்து விளங்குகிறது.
நெஞ்சுக்கு நீதி...தெளிந்த நீரோடை போலக் கதை செல்கிறது. வேகம் குறையாத ஸ்க்ரீன் ப்லே படத்திற்கு பக்க பலம்.
ஆதிக்கச் சாதியினர், அதிகார மீறல் என்று அனைத்தையும் நெஞ்சுக்கு நீதி குழுவினர் தொட்டு இருக்கிறார்கள். இப்படம் எதையும் மறைக்காமல், துணிச்சலாக அனைத்தையும் காட்டியிருக்கிறது. தைரியம் தான்! இதுவே முதல் நீதி...
நெஞ்சுக்கு நீதி படத்தில் வரும் வசனம் ஒவ்வொன்றும் வாக்கியம். சுடுகாட்டில் ஏன் நம்மள இங்க எரியவிடமாட்டேன்றாங்க என்று சிறுவன் கேட்பது. சாக்கடையில இறங்குனா தான் நியாயம் கிடைக்கும்னா, அப்போ முதல்ல இறங்குற ஆளு நானா தான் இருப்பேன். போட்றா விசிலனு சொல்லலாம்.
IPS அதிகாரி விஜயராகவன்...கதாநாயகன், இல்லை கதையின் நாயகன் நடிப்பில் நூறு சதவீதத்தை தந்துள்ளார். பொறுப்பான கேரக்ட்டர் என்பதால் வெறப்பாக மட்டுமே இல்லாமல், சூழ்நிலை அறிந்து நடந்துகொள்ளும் விதம் பலே. ஓர் நடிகராக தன்னை அருமையாக செதுக்கிக்கொண்டுள்ளார்.
ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் பார்த்த எதார்த்த சரவணனா இப்படி கவனம் ஈர்க்கும் காவல் அதிகாரி பாத்திரத்தில் என்று வியக்க வைக்கிறார் நடிகர் உதயநிதி.
திங்கிற சோற்றில் இருந்து, கும்பிடுற சாமி வரை அனைத்திலும் சாதி. இதை அற்புதமாக படத்தில் செதுக்கியுள்ளார் கனா நாயகனான இயக்குனர் அருண்ராஜா காமராஜ். அதிக கருத்தூசி என்று யாராவது கூறினால் அவர்கள் சாதி கொடுமை என்னவென்று அறியாதவர்களாக இருப்பார்கள் என்றே அர்த்தம். துணை நடிகர்கள் இந்த நெஞ்சுக்கு நீதி படத்துக்கு பெரும் துணையே.
சுந்தரமாக வரும் சுரேஷ் சக்ரவர்த்தி, மலைச்சாமியாக வரும் இளவரசு, மயில்சாமி, பாதுகாவலர் நாகராஜ் என அனைவரும் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
பிக்பாஸில் பாஸ்-ஆக திகழ்ந்த ஆரி, இந்த நெஞ்சுக்கு நீதி படத்தில் தரமான பாத்திரத்தில் நடித்துள்ளார். நிச்சயம் அவருக்கு நல்ல பெயரை இந்த படம் பெற்றுத்தரும்.
போன் காலில் மட்டுமே வந்தாலும்..அழகான அதிதியாய் வந்துள்ளார் டான்யா. விஜயராகவனின் காதலியாக வரும் டான்யா, அவ்வபோது ஐடியாக்களை அள்ளி வீசுகிறார்.
சூரியன் உதயமாகும் போல் ஒரு ஷாட் வைத்து விழிகளுக்கு விருந்து வைத்துள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்.
இசையமைப்பாளர் திபுநினன் தாமஸ், போற்றப்பட வேண்டிய ஒரு டெக்னிஷியன். படத்தின் வேகத்திற்கு சரியான பின்னணி இசையை தந்துள்ளார்.
படத்தில் மொழி திணிப்பு பற்றி ஒரு காட்சி வரும்...மொழியை கற்றுக்கொள்வது ஆர்வம் ! திணிப்பது ஆணவம் ! அரங்கமே கிளாப்ஸில் அதிருகிறது.
எல்லாருமே சமம் என்றால் யாரு தான் இங்க ராஜா ? என்ற வசனம் கடைசி வசனம் மட்டுமல்ல அனைவரும் யோசிக்க வேண்டிய ஒன்று.
காவல் அதிகாரி விஜயராகவன் என்ன செய்கிறார் ? இறுதியில் நீதி வென்றதா ? என்பதே இந்த நெஞ்சுக்கு நீதி கூறவரும் கருத்தாக இருக்கும். அது நம் நெஞ்சை தொடும்.
நம் தாய்மொழி எந்த மொழியாக வேணா இருக்கலாம், ஆனால் தேசிய மொழி சட்டமாக இருக்கணும் ! அது சரியானவர்கள் கையில் இருக்கவேண்டும் என்று கூறிய இறுதி வசனம் உதயநிதி நீதிக்கு தந்த உதயம்.
வலிகள் இருந்தால்...விடியல் நிச்சயம் என்ற உணர்ச்சிபூர்வமான கருத்தை முன்வைத்த நெஞ்சுக்கு நீதி படக்குழுவுக்கு கலாட்டாவின் சல்யூட்.
Verdict: சமூத்தில் நடக்கும் அத்தனை பிரச்சனைகளையும், அநீதிகளையும் பேசி, அதற்கு எதிராக ஜெயிக்கவும் செய்திருக்கிறார்கள் உதயநிதி மற்றும் அருண்ராஜா காமராஜ்.