Mahaan Movie Cast & Crew
சீயான் விக்ரம் தனது மகன் துருவ் விக்ரம் உடன் இணைந்து நடித்துள்ள மகான் படம் நேரடியாக OTT-யில் பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகியுள்ளது.கார்த்தி சுப்பாராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை பார்க்கலாம்
காந்தியவாத குடும்பத்தில் பிறந்த மகானாக ஹீரோ விக்ரம்,காந்திய கொள்கைகளால் தனது சுதந்திரத்தை மிஸ் செய்யும் இவர் பிறந்தநாள் அன்று அந்த கொள்கைகளை மீறி குடித்து,சீட்டாடியதால் தனது மனைவி சிம்ரன் மற்றும் மகன் துருவ்வை பிரிகிறார்.குடும்பத்தின் பிரிவுக்கு பிறகு தனது நண்பர் பாபி சிம்ஹாவுடன் இணைந்து தமிழ்நாட்டிலேயே பெரிய சரக்கு வியாபாரியாக மாறுகிறார் விக்ரம்.
20 வருடங்களுக்கு பிறகு போலீசாக ரீ என்ட்ரி தரும் துருவ் , தமிழ்நாட்டில் பெருகி வரும் மதுக்கலாச்சாரத்தை ஒழித்து அதில் இருக்கும் முக்கிய தலைகளை என்கவுண்டர் செய்ய வருகிறார்.இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்ளும் மகான் தனது நண்பர்களையும் சாராய சாம்ராஜித்தையும் காப்பாற்றினாரா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக்கதை.
இந்த கதையின் மகானாக விக்ரம் என்னும் மகாநடிகன் , படத்தினை தனது தோள்மீது தூக்கி சுமக்கிறார்.ஆக்ஷன்,செண்டிமெண்ட் என விக்ரமுக்கே எழுதப்பட்ட ஒரு கதாபாத்திரம் போல இது அமைந்துள்ளது,தனக்கு ஏற்ற தீனி கிடைத்ததும் நடிப்பில் ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார்.படத்தின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விக்ரம் தான்.விக்ரமுக்கு அடுத்தபடியாக படத்தில் அசத்தியிருப்பவர் பாபி சிம்ஹா.தனது எதார்த்த நடிப்பினால் நம் மனம் கவர்கிறார் பாபி.சனந்த்,முத்துக்குமார் போன்றோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக கட்சிதமாக செய்துள்ளனர்.
விக்ரமுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் தாதா கதாபாத்திரத்தில் துருவ் விக்ரம்.தனது முந்தைய படத்துக்கு எதிர்மறையான கதாபாத்திரம் என்றாலும் அதனை கனகச்சிதமாக செய்துள்ளார்.விக்ரம் போன்ற நடிகருடன் தோன்றி அவரை மீறி ஸ்கோர் செய்வது என்பது அசாதாரணமான விஷயம் என்றாலும் பல இடங்களில் தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார் துருவ்.
விக்ரம்-துருவ் விக்ரம் இணைந்து வரும் காட்சிகள் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும்.சிம்ரனுக்கு படத்தில் சொல்லிக்கொள்ளும் படி பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் தனது பணியை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.இரண்டாம் பாதியில் விக்ரம்-சிம்ஹாவிடம் பேசும் காட்சி,விக்ரம்-சிம்ரன் காட்சி போன்ற எமோஷனல் காட்சிகள் ஒர்க்கவுட் ஆகியுள்ளன.
முந்தைய படத்தில் சற்று சறுக்கிய கார்த்திக் சுப்பாராஜ் இந்த படத்தில் தவறுகளை சரி செய்து தனது கேங்ஸ்டர் மோடில் ஒரு டீசென்ட்டான படத்தினை கொடுத்துள்ளார்.முன்னணி கதாபாத்திரங்களை கட்சிதமாக தேர்வு செய்து அசத்தியுள்ளார் கார்த்திக் சுப்பாராஜ்.சில சூப்பர் காட்சிகளில் ஸ்கோர் செய்தாலும் திரைக்கதையில் பெரிய சுவாரசியம் இல்லாததால் கார்த்திக் சுப்பாராஜின் அந்த மேஜிக்கல் ட்விட்ஸ்ட் இந்த படத்தில் மிஸ் ஆகிறது.
தனது வித்தியாசமான கேமரா ஆங்கிள்கள் மூலம் கவனம் ஈர்க்கிறார் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா.முதல் பாதியில் வரும் விக்ரமின் முதல் சண்டைக்காட்சி,விக்ரம்-துருவ் சந்திக்கும் சப்வே காட்சி என பல இடங்களில் ஸ்கோர் செய்கிறார்.சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு பெரிதளவில் கைகொடுக்கவில்லை,சில இடங்களை தவிர பின்னணி இசையிலும் பெரிதாக அவர் ஸ்கோர் செய்யாதது ஏமாற்றம் தான்.படத்தின் முக்கிய பின்னடைவு படத்தின் நீளம் மற்றும் ஸ்லோவான திரைக்கதை.சில காட்சிகளை மெருகேற்றி படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் ஒரு நல்ல கேங்ஸ்டர் படத்தினை கொடுத்திருக்கலாம்.
சில குறைகள் இருந்தாலும் மகான் மாஸான கேங்ஸ்டர் ஆக ரசிக்க வைக்கிறார்
Verdict: கேங்ஸ்டர் பட பிரியர்களுக்கு மகிழ்ச்சி தருவார் இந்த மகான்