மாரி 2 திரைப்பட விமர்சனம் Movie Review (2018)

21-12-2018
Balaji Mohan
Maari 2 Movie Review

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் எதார்த்த மனநிலையை நன்கு அறிந்து அதற்க்கு ஏற்றார் போல் படைப்புகளை தரும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் பாலாஜி மோஹன். அவரது இயக்கத்தில் Wunderbar தயாரிப்பில் நடிகர் தனுஷ் தயாரித்து நடித்து 21 டிசம்பர் 2018 வெளியான படம் மாரி 2. குறும்புத்தனமான டான் பாத்திரத்தில் தனுஷ் நடித்திருக்கும் இப்படத்தில் ரோபோ ஷங்கர், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலக்ஷ்மி சரத்குமார், டவினோ தாமஸ் போன்ற நட்சத்திரங்கள் உள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். 

நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பளார், இயக்குனர் என பல அவதாரங்கள் எடுத்து அதில் வெற்றி கொடியை நாட்டும் நடிகர் தனுஷின் படம் இந்த மாரி 2. அதிகாலை காத்திருந்த தனது அன்பான ரசிகர்களுக்கு அதிர வைக்கும் என்ட்ரியை தந்து எனர்ஜி ஏத்தினார் தனுஷ். திரைத்தேடல் நிறைந்த இக்கலைஞனின் நடிப்பை பாராட்ட வார்த்தைகள் ஏது. மாரி என்ற பாத்திரத்திற்கே உண்டான சிறப்பம்சத்தை அழகாக திரையில் வெளிப்படுத்தியிருந்தார். முதல் பாதியில் நாம் எதிர்பார்த்த கெத்தான மாரியாகவும் இரண்டாம் பாதியில் பொறுப்பு நிறைந்த மாரியப்பனாக ஈர்க்கிறார்.

அராத்து ஆனந்தியாக வரும் சாய் பல்லவியின் நடிப்பு படத்திற்கு மிகப்பெரிய வலு என்றே கூறலாம். தரமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுக்கும் இவரது திறன் போற்றப்படுபவையாகும். நடிப்பு, எக்ஸ்ப்பிரஷன் என கலக்கியிருக்கிறார். பபுல் கம் போல வளைந்து நெளிந்து இவர் ஆடிய ரவுடி பேபி நடனதிற்கு அமோக வரவேற்பு. சிறந்த நடிகரான தனுஷுடன் சரிசமமாக ஸ்க்ரீன் ஷேர் செய்து கட்டியிழுகிறார் சாய் பல்லவி.

ரோபோ ஷங்கர் மற்றும் வினோத்தின் இயற்கையான எதார்த்த காமெடி நாம் அன்றாட வாழ்வில் பார்க்கும் நண்பர்கள் போல் மனதில் பதிகிறார்கள். இரண்டாம் பாகம் என்பதால் இசை பிசிறு தட்டுமா என்ற கேள்விக்கு சரியான விடையாக அமைந்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. பின்னணி இசை முதல் பாகத்துடன் சற்று சூடு குறைவாகவே உள்ளது. அத்தருணத்தில் அனிருத் குறித்து ஏங்கினர் ரசிகர்கள்.

கலை என்ற பாத்திரத்தில் மாரியின் நண்பராக வரும் நடிகர் கிருஷ்ணாவின் நடிப்பு சிறப்பாக இருந்தது. இதன் மூலம் பெரிய நடிகர்களுடன் மல்டி ஸ்டாரர் படங்களில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அலப்பறை செய்து கொண்டாடியவர்களை திரையரங்கிற்கே தாலாட்டு பாடி சொக்க வைத்த பெருமை இசைஞானி இளையராஜாவையே சேரும்.

வில்லனாக வரும் டோவினோ தாமஸ் பீஜா என்ற ரோலில் தனது நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், இன்னும் கூர்மையாக இருந்திருக்கலாம் என்று யோசிக்க வைக்கிறது. sequel எடுக்கும் போது சில கருத்துக்கள், லாஜிக்குகள் சில இடங்களில் குறையாக தோன்றினாலும். அதற்க்கு நிறையாக எடிட்டிங், ஒளிப்பதிவு என கவனம் செலுத்தி காட்சிகளை கட்சிதமாக பொருத்தியிருக்கிறார் இயக்குனர்.

இந்த வருடம் வரலக்ஷ்மியின் மறக்க முடியாத ஆண்டு என்றே கூறலாம். இவர் இல்லாத படங்களை இல்லை. இதிலும் கலெக்ட்டர் விஜயாவாக சில முக்கிய காட்சிகளில் தோன்றியிருக்கிறார். முதல் பாகத்தில் கான்ஸ்டாப்பிலாக இருந்தவர் பதவி உயர்வு பெற்று இன்ஸ்பெக்டராக நடிகர் காளி வரும் காட்சிகள் முதல் பாகத்தை நினைவு படுத்துகிறது.

இறுதிகட்ட காட்சிகள் எல்லை மீறி போனாலும், 6 பேக்ஸ் உடன் வரும் தனுஷுக்கு அரங்கம் முழுவதும் கைதட்டல் மற்றும் விசில் பறக்கிறது. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் தனது பணியை சிறப்பாக செய்திருக்கிறார். கர்மஷியல் படத்திற்கு ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றார் போல் எடிட்டிங்கில் பிரசன்னா அசத்தியிருக்கிறார். கேரக்டர் ஆர்டிஸ்ட்டாக படத்தில் தோன்றிய அனைவரும் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். இப்பெருமை அனைத்தும் இதுவரை 19 படங்களை தந்த wunderbar தயாரிப்பு நிறுவனத்திற்கே சேரும்.

இப்படம் சிறப்பாக திரையரங்குகளில் ஓடி ரசிகர்களை ஈர்த்து பெரிதளவில் வெற்றி பெற கலாட்டா சார்பாக வாழ்த்துகிறோம்.

Verdict: முதல் பாகம் போல் இல்லை என்ற வருத்தம் ரசிகர்களிடையே பெரிதும் காணப்படுகிறது. ஆனால் நிச்சயம் படம் உங்களை உட்காரச்செய்து என்டர்டெயின் செய்யும் என்பதை முன்வைக்கிறோம்.

Galatta Rating: ( 2.5 /5.0 )



Rate Maari 2 Movie - ( 0 )
Public/Audience Rating