Hero Movie Cast & Crew
சிவகார்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஹீரோ.சூப்பர்ஹீரோ படமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று ரிலீஸாகியுள்ளது.இரும்புத்திரை படத்தின் இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இன்று திரைக்கு வந்துள்ள இந்த படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததா என்பதை பார்க்கலாம்.
போலி சர்டிபிகேட்டுகக்ளை தயார் செய்து தருவது,கல்லூரிகளில் மாணவர்களை சேர்த்துவிட்டு கமிஷன் வாங்குவது என்று ஜாலியாக சுற்றித்திரியும் நாயகன்.இளைஞர்களின் கண்டுபிடிப்புகளை தன்வசப்படுத்தும் வில்லனிடம் இருந்து அவர்களை காப்பாற்ற சூப்பர்ஹீரோ அவதாரம் எடுக்கிறார்.இளைஞர்களை காப்பாற்றி வில்லனை எப்படி வீழ்த்தினார் என்பது மீதிக்கதை.
கதையின் நாயகன் சக்தியாக சிவகார்த்திகேயன் ஜாலியான இளைஞனாகவும் சரி,சூப்பர்ஹீரோவாகவும் மிகச்சரியாக பொருந்திப்போகிறார்.ஒவ்வொரு படத்திற்கும் நடிப்பு,ஆக்ஷன் என்று தன்னை மெருகேற்றிக்கொள்கிறார்இ.வரது எனர்ஜி படத்தின் பலமாக அமைகிறது நாயகி.கல்யாணி ப்ரியதர்ஷன் வழக்கம்போல் வரும் தமிழ் சினிமாவின் டெம்ப்லேட் ஹீரோயினாக வந்து செல்கிறார். ஷங்கரின் காமெடி அவ்வப்போது நம்மை ரசிக்க வைக்கிறது.ஒரு கட்டத்திற்கு மேல் ரோபோ ஷங்கர் என்ன ஆனார் என்பதே தெரியாமல் போய் விடுகிறது.
படத்தின் மற்றுமொரு பலம் அர்ஜுன் இரும்புத்திரை படத்திற்கு பிறகு இந்த படத்திலும் அர்ஜுன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.சண்டை காட்சிகளிலும் அசத்துகிறார் நம் ஆக்ஷன் கிங்.இந்த படத்தில் வில்லனாக அறிமுகமாகியிருக்கும் அபய் தியோல் தனது நடிப்பால் நம்மை ஆச்சரியப்பட வைத்துள்ளார்.இவானா,அழகம் பெருமாள் உள்ளிட்ட நட்சத்திரங்கள் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
தமிழில் பலமுறை பல இயக்குனர்கள் முயற்சித்து பெரிதும் வெற்றியடையாத சூப்பர்ஹீரோ வகை படத்தை எடுத்ததற்கு இயக்குனர் மித்ரனுக்கு பாராட்டுக்கள்.சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை தனக்கு தெரிந்த விதத்தில் மக்களுக்கு எடுத்துரைத்து அதற்கு தன்னால் முடிந்தளவு என்னென்ன மாற்றங்களை கொண்டுவரலாம் என்பதையும் தெரிவித்துள்ளார்.
முதல் பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியில் சற்று குறைந்து காணப்பட்டது தெரிந்தது இயக்குனர் இரண்டாம் பாதியின் திரைக்கதையிலும் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் திரைக்கதை சுவாரசியமாக இருந்திருக்கும்.சூப்பர்ஹீரோ சப்ஜெக்ட்டில் கமெர்ஷியல் விஷயங்களை சேர்த்து ரசிகர்கள் ரசிக்கும்படி ஒரு நல்ல படத்தை தந்துள்ளார்.
சூப்பர்ஹீரோ படம் என்றவுடன் முழுவதுமாக இருட்டிலேயே எடுத்துவிடுவார்களோ என்று ரசிகர்கள் யோசித்த வேளையில் தனது கேமரா திறமையின் மூலம் மீண்டும் நம்மை ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் ஜார்ஜ் சி வில்லியம்ஸ்.யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் சொல்லிக்கொள்ளும்படி இல்லையென்றாலும் பின்னணி இசையில் தான் தான் எப்போதும் ராஜா என்று நிரூபித்துள்ளார் யுவன்.எடிட்டர் ரூபன் தனக்கு வழங்கப்பட்ட பணியை கச்சிதமாக செய்துள்ளார்.ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் அதனை மறந்து நம்மை ரசிக்கவைத்து நம்மிடம் ஒரு முக்கிய கருத்தையும் பதிவுசெய்துள்ளார் இந்த ஹீரோ.
Verdict: தமிழ் சினிமாவின் கமர்சியல் சூப்பர்ஹீரோ படங்களுக்கு விதை இந்த ஹீரோ