அறிமுக இயக்குனர் பரத் கம்மா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா காம்பினேசனில் உருவாகியுள்ள படம் டியர் காம்ரேட். தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
வீட்டில் சைத்தன்யாவாகவும் சமுதாயத்தில் பொறுப்புடன் இருக்கும் காம்ரேட் பாபியாகவும் கச்சிதமாக பொருந்தியுள்ளார் நாயகன் விஜய்தேவரகொண்டா. விஜய் தேவரகொண்டாவிற்கென இருக்கும் வசீகர தன்மை ஃபிரேம் முழுவதும் நிரம்பி வழிகிறது. எச்செயல் செய்தாலும் அதை ஈர்க்கும் வண்ணம் செய்வது அவரது திறமை. காம்ரேட் பாபியாக வரும் நாயகன், நாயகி லில்லியுடன் காதலில் விழுந்து பின் நாயகி சந்திக்கும் பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்கிறார், காதலுக்காக தன்னை எப்படி மாற்றிக்கொள்கிறார் என்பதே இந்த டியர் காம்ரேட் படத்தின் கதைச்சுருக்கம்.
காதல், நட்பு, அழகான குடும்ப சூழல் என முதல் பாதி நகர்கிறது. பெண்கள் சந்திக்கும் பாலியல் வன்கொடுமை அதற்கான சரியான தீர்வு மற்றும் காம்ரேட் என்பதன் சரியான பொருள் என இரண்டாம் பாதி நகர்கிறது.
கிரிக்கெட் வீராங்கனை அபர்ணா தேவியாக வரும் ராஷ்மிகாவின் நடிப்பு பிரமாதம். பாபியின் காதலி லில்லியாக வரும் காட்சிகளில் குறும்புத்தனமான செயல்களும், இரண்டாம் பாதியில் பொறுப்புணர்ச்சியுடன் செய்யும் பெர்ஃபார்மன்ஸ் பலே. படத்தின் முழு நேரமும் தோன்றி அசத்தியுள்ளார். வெறும் நடனமாடி, நடமாடி, மொக்கை ஜோக் ஹீரோயின்கள் மத்தியில் சீரான கமர்ஷியல் நாயகியாக திகழ்ந்துள்ளார் ராஷ்மிகா.
ஜஸ்டின் பிரபாகரன் போன்ற இசையமைப்பாளர்களை ரசிகர்கள் கொண்டாட வேண்டும். மாஸாகவும், கிளாஸாக இருக்கும் பின்னணி இசையை விருந்தாக படைத்துள்ளார் ஜஸ்டின். குறிப்பாக காம்ரேட் ஆன்தம் இளைஞர்கள் கொண்டாடும் விதமாக இருந்தது. ரொமான்டிக் பாடல்கள் மனதை வருடும் அளவிற்கு இருந்தது.
பழம்பெரும் நடிகர் சாருஹாசனை சிறுது நேரம் மட்டும் காண்பிக்கிறார்கள். அவருக்கென ஃபிளாஷ்பேக் போகாதது நல்லது. தூத்துக்குடி காவல் நிலையத்தில் ஆந்திர போலீஸ் இருப்பது போன்ற லாஜிக் குறைபாடுகள் இருந்தாலும், டப்பிங் படங்களில் இது சகஜமே. அடிக்கடி வரும் சண்டை காட்சிகளை தவிர்த்திருக்கலாம். சில காட்சிகள் அர்ஜுன் ரெட்டி படம் போல் தெரிகிறது. அது பின்னடைவை தருகிறது.
படத்தில் தோன்றும் வசனம் கதைக்கு தேவையானவாறு எழுதியுள்ளனர். குறிப்பாக "வரும்போது சந்தோஷத்தை தரும் காதல், போகும்போது ஏன் வருத்தத்தை தருகிறது" என்னும் வசனத்திற்கு கிளாப்ஸ் மற்றும் விசில் சத்தம் காதை கிழிக்கிறது. படத்தின் ரன்-டைம் அதிகமாக இருந்தது போல் விளங்கியது.
Verdict: பெண்ணின் வாழ்வில் அவளுக்கு துணையாக இருக்கும் ஒவ்வொரு ஆணும் காம்ரேட் என்பதே இந்த படம் கூறும் விஷயம்