தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரன்.பொல்லாதவன்,ஆடுகளம்,வடசென்னை படங்களின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இன்று வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை பார்க்கலாம்
தனது மகன்கள்,மகள்,மனைவி என்று சந்தோசமாக வாழ்ந்து வரும் சிவசாமி என்ற தனுஷ்.ஒரு நிலப்பிரச்னையில் ஊரில் உள்ள பணக்காரரை தனுஷின் இளையமகன் கொலைசெய்கிறார்.இதனை அறிந்த தனுஷ் தனது மகனை கொல்லத்துரத்தும் எதிரிகளிடமிருந்து அவரை காப்பாற்ற போராடுகிறார்.தனுஷ் தனது மகனை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றினாரா இல்லையா என்பது மீதிக்கதை
வெக்கை என்ற புத்தகத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.தமிழ் சினிமாவிற்கு மிகவும் பரிட்சயமான கதை தான் என்றாலும் அதனை எடுத்து சொல்வதற்கு வெற்றிமாறன் என்று ஒரு சிறந்த கதாசிரியர் அதனை சொல்லியிருக்கும் விதம் மிகவும் அழகானது
படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் அது நாயகன் தனுஷ் தான் எதற்கெடுத்தாலும் ஆத்திரப்படும் இளைஞர்,நிதானமாக யோசித்து முடிவெடுக்கும் குடும்ப தலைவர் என்று இருவேறு கோணங்களில் நடிப்பு அசுரனாக மிரட்டியுள்ளார்.படத்தை தன் தோளில் தூக்கி சுமந்திருக்கிறார் தனுஷ்.மஞ்சு வாரியர் தனுஷ் போன்ற ஒருவரை பக்கத்தில் வைத்துக்கொண்டு போட்டிபோட்டு நடிப்பது என்பது சாதாரண விஷயமில்லை அதனை மிகச்சாதாரணமாக செய்துள்ளார்
தனுஷின் மகன்களாக வரும் டீஜே,கென் கருணாஸ் தங்களது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளனர்.பசுபதி,ஆடுகளம் நரேன்,பவன்,அம்மு அபிராமி,பிரகாஷ்ராஜ்.பாலாஜி சக்திவேல் என்று ஒவ்வொருவரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர்.
வெற்றிமாறன் ஒரு சாதாரண பழிவாங்கும் கதைதான் என்றாலும் அதனை தனது திரைக்கதையால் மெருகேற்றியுள்ளார் வெற்றிமாறன்.படத்தின் தொடக்கத்தில் இருந்தே கதைக்குள் நுழைந்த வெற்றிமாறன் அதிலிருந்து தடம்மாறாமல் முதல் பாதி முழுவதும் சென்றிருந்தார்.இரண்டாம் பாதியில் தனுஷின் ஃப்ளாஷ்பாக் கதை வரவே அந்த வேகம் சற்று குறைகிறது.
படத்தின் மற்றுமொரு நாயகன் ஜீ.வி.பிரகாஷ் பாடல்கள் ஓகேவாக இருந்தாலும் தனது பின்னணி இசையால் படத்தின் தரத்தை உயர்த்துகிறார்.சண்டைக்காட்சிகளில் அனல்பறக்க இசைவேண்டுமானாலும் சரி,சோகமான காட்சிகளில் நம்மை இசையால் உருகவைப்பதிலும் சரி ஜீ.வி அசத்தியுள்ளார்.வேல்ராஜ் தனது கேமரா திறமையால் நமக்கு கிராமத்திற்கே அழைத்து செல்கிறார்.
படத்திற்கு மேலும் ஒரு பலமாக இருப்பது வசனங்கள் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் தனுஷ் பேசும் வசனம் அந்த கதாபாத்திரத்தின் உணர்ச்சியை அழகாக வெளிப்படுத்துகிறது.இரண்டு மணி நேரம் 20 நிமிடம் ஓடு இந்த படத்தில் பாடல்கள் கனகச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளன.கதையை சொல்லும்விதத்தில் மாறுதல் இல்லையென்றாலும் கதை மெதுவாக நகருவது படத்திற்கு பின்னடைவு
ஜிகர்தண்டா படத்தில் சொல்வதை போல ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு சண்டை படத்தை பார்த்த ஒரு அனுவபம்.சண்டைக்காட்சிகள் மிக யதார்த்தமாக சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளன.நல்ல தரமான சினிமாவை நமது மண்வாசனையோடு தரவேண்டும் என்று பாடுபடும் வெற்றிமாறன் மற்றும் தனுஷின் திரைதாகம் தீராமல் தொடரட்டும்.
Verdict: தனது குடும்பத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனை வந்தால் அவர்களை எதிரிகளிடம் இருந்து காப்பவன் தான் இந்த அசுரன்.