பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலிக்கு கொரோனா தொற்று... உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!
கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வரும் சவுரவ் கங்குலியின் உடல்நிலை மற்றும் சிகிச்சை விவரம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பி.சி.சி.ஐ. தலைவருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் நேற்று (டிசம்பர் 27) மாலை சிகிச்சைக்காக உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
தற்போது அவருக்கு ‘மோனோ க்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் தெரபி’ (Monoclonal antibody cocktail therapy) எனப்படும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தாலும், தீவிர பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு இந்த சிகிச்சை அளிக்கப்படும் என கூறப்படுகிறது. அனுபவமிக்க மருத்துவ குழுவினர் மூலம் சவுரவ் கங்குலிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது 49 வயதாகும் சவுரவ் கங்குலி, இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ளார். அண்மைக் காலமாக பல்வேறு பணி சார்ந்த பயணங்களை மேற்கொண்டு வந்த அவருக்கு, நேற்றைய தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த ஆண்டு இதோடு 3-வது முறையாக கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஆஞ்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பிறகு 2 வாரங்கள் கழித்து மீண்டும் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால், 2-வது சுற்று ஆஞ்ஜியோ பிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டு ஸ்டெண்ட் கருவி பொருத்தப்பட்டது. சவுரவ் கங்குலியின் உடலில் இருந்து ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு மரபணு பரிசோதனைக்கு அனுப்பப்படும் எனத் தெரிகிறது.
அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றா அல்லது ஒமிக்ரான் தொற்றா எனக் கண்டறிய மரபணு தொடர் வரிசைப்படுத்துதலுக்காக ஆய்வுக்கு அனுப்பப்படும் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கங்குலியின் அண்ணனுக்கும் இந்த ஆண்டு தொடக்கத்தில் கோவிட் வந்தது.
கடந்த 24 ஆம் தேதி கொல்கத்தாவில் நடந்த சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கங்குலி பங்கேற்றுள்ளார். அங்கு, திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி, பபுல் சுப்ரியா, நுஸ்ரத் ஜகான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பி.சி.சி.ஐ. வட்டாரங்கள் கூறுகையில் “கங்குலிக்கு நேற்று இரவு லேசான உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, கொல்கத்தா உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வரும்நிலையில் தற்போது அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.