“டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறேன்” விராட் கோலி அறிவிப்பு
இந்திய அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அதிரடியாக அறிவித்து உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் அனைத்து வடிவிலான போட்டிகளுக்கும் 32 வயதான கோலி விராட் கோலி, கேப்டனாக இருந்து வருகிறார்.
இப்படியாக, 3 வடிவிலான போட்டிகளுக்கும் கோலி கேப்டனாக இருப்பதால், இதனால் ஏற்பட்டு இருக்கும் பணிச் சுமையைக் குறைக்கும் வகையில் விராட் கோலியின் நிலைப்பாடு இருப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.
அத்துடன், “20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விலக இருப்பதாக” கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியானது.
அதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது என்னவென்றால், “தன்னுடைய பேட்டிங்கில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்” என்ற நோக்கத்தில் விராட் கோலி, இந்த முடிவு எடுத்திருப்பதாகவும்” அப்போது தகவல்கள் வெளியானது.
இதன் காரணமாக, “ஒரு நாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு தற்போது துணை கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும்” பிசிசிஐ வட்டாரங்களில் அப்போது கிசுகிசுக்கப்படுகிறது.
இவற்றுடன், அதே போல், “டெஸ்ட் அணிக்கு விராட் கோலியையும், ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக்கலாம் என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாகவும்” தகவல்கள் வெளியானது.
குறிப்பாக, “விராட் கோலி அடுத்த மாதம் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறார்” என்றும் தகவல்கள் வெளியானது.
மேலும், விராட் கோலி தாமாக முன்வந்து இந்த விலகல் முடிவு எடுத்துள்ளதாகவும்” கூறப்பட்டது.
இந்த நிலையில் தான், “டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக” விராட் கோலி தற்போது அறிவித்து உள்ளார்.
இது குறித்து விராட் கோலி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கேப்டன் பொறுப்பிலிருந்து விலகும் முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டேன்” என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், “டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்த டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாகவும்” கோலி அறிவித்து உள்ளார்.
கடந்த சில தினங்களாக இது தொடர்பாக தொடர்ச்சியாக பல்வேறு செய்திகள் வெளியான நிலையில், விராட் கோலியே தனது சார்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு தனது முடிவையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.