டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன்.. இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்று சாதனை!
டோக்கியோ பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கம் வென்று புதிய சாதனை படைத்து உள்ளார். இந்த தங்கம் வென்றதன் மூலம் இந்தியாவுக்கு 4 வது தங்கம் கிடைத்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16 வது பாரா ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஆனால், முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு பாராலிம்பிக்கில் இந்திய வீரர்கள் பலரும் புது வெளிச்சம் பாய்ச்சி வருகின்றனர்.
அதிலும், இன்றைய நாள் தங்க பதக்கத்துடன் மிக பிரகாசமாக இந்தியாவிற்கு மிகவும் சாதகமாகவே அமைந்திருக்கிறது.
அதன் படி, காலையில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில், மணீர் நார்வால் தங்கம் வென்று ஒரு பக்கம் அசத்திய நிலையில், அதே போட்டியில் இரண்டாமிடம் பிடித்த சிங்ராஜ் வெள்ளி பதக்கம் வென்று அசத்தினார்.
இந்த நிலையில் டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்து உள்ளார்.
ஆம், பாரா ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரராக வலம் வரும் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதிப்போட்டியில் வென்று தங்கம் வென்றிருக்கிறார்.
இவர் கண்டிப்பாகப் பதக்கம் வெல்வார் என்று பெரிய அளவில் எதிர்பார்த்து எழுந்த நிலையில், இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படியே பூர்த்தி செய்துள்ளார்.
பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஒடிசாவை சேர்ந்த 33 வயதாகும் பிரமோத் பகத், உலகின் நம்பர் 1 வீரராக இருப்பதால், இறுதிப் போட்டி வரை வருவது அவ்வளவு ஒன்றும் கடினமான காரியம் அல்ல என்ற போதிலும், லீக் போட்டிகள், காலிறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் மிக எளிதாக வெற்றி பெற்று இவர் இறுதி போட்டியில் நுழைந்தார் என்றே சொல்ல வேண்டும்.
சற்று முன்பாக நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில், உலகின் நம்பர் 2 வீரரான பெத்தேலுடன் மோதி விளையாடினார்.
இருவருக்குமே இந்த போட்டி மிகவும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தான், 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் பெத்தேலே வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்து உள்ளார்.
இந்த தங்கப் பதக்கம் மூலமாக, இந்தியா பெறும் 4 வது தங்கப் பதக்கம் இதுவாகும்.
அதே போல, பேட்மிண்டன் போட்டியில் மனோஜ் சர்க்கார் வெண்கலப் பதக்கம் வென்றார். ஜப்பான் வீரர் டைசுகேவை 20-22, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதன் மூலமாக, இந்தியா இதுவரை 4 தங்கம், 7 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 17 பதக்கங்களை வென்று புதிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.