கோலாகலமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா! மன்பிரீத் சிங் - மேரி கோம் இந்திய கொடி ஏந்தி சென்றனர்!!
கோலாகலமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்கில், குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன்
மன்பிரீத்சிங் ஆகிய இருவரும், இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் சற்று முன்பாக கோலாகாலமாக தொடங்கியது.
உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற வேண்டிய இந்த ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது, ஜப்பானிலேயே பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், சற்று முன்பாக சரியாக 4.30 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிகளான, ஒலிம்பிக் திருவிழா கோலகலமாக தொடங்கி உள்ளது.
இன்று தொடங்கும் இந்த ஒலிம்பிக் போட்டிகள் வரும், ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கொரோனா பாதிப்பின் காரணமாக ஒலிம்பிக் வீரர்களுக்கு இது வரையில் இல்லாத வகையில், பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
டோக்கியோ ஒலிம்பிக் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதன் படி, முறைப்படி விழா தொடங்கியதும், முதலிலில் ஜப்பானின் தேசிய கீதம் படப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, ஒலிம்பிக் போட்டியின் முதல் நிகழ்வாக, கடந்த 121 நாட்களாக ஜப்பானை வலம் வந்த ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.
ஒலிம்பிக் விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, போட்டியில் பங்கேற்கும் 204 நாட்டு அணியினரும் தங்கள் நாட்டின் தேசியக் கொடியுடன் மிடுக்காக அணி வகுத்து வந்தனர்.
அதன் படி, இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம் மற்றும் ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு இந்த முறை வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.
அத்துடன், கொரோனா கட்டுப்பாடு காரணமாக இந்த தொடக்க விழாவில் இந்தியா சார்பில் 6 அதிகாரிகள், 19 வீரர் மற்றும் வீராங்கனைகள் மட்டும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே, சர்ஃபிங், ஸ்கேட்போர்டிங், பேஸ்பால், சாஃப்ட்பால், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய 5 விளையாட்டுகள் தற்போது புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளது.
இதனிடையே, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒலிம்பிக் துவக்க விழாவில் ரசிகர்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஒலிம்பிக் தொடக்க விழாவில் 950 பார்வையாளர்கள் மட்டும் பங்கேற்ற அனுமதிக்கப்பட்டனர்.