“10 ஆண்டுகால ஆட்சியில் இருந்தால் எதை சாதிக்க முடியுமோ, அதனை ஒரே ஆண்டில் நாங்கள் சாதித்துக் காட்டியிருக்கிறோம்” என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து உள்ளார்.
சென்னையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். ராஜா இல்லத் திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்துகொண்ட மணமக்களை வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார்.
அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஓராண்டு காலம் தான் முடிந்திருக்கிறது என்றும், ஆனால் இந்த ஓராண்டு காலத்தில் 10 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்தால் எதை சாதிக்க முடியுமோ, அதை விட பல மடங்கு சாதனையை இன்றைக்கு நாம் சாதித்துக் காட்டியிருக்கிறோம்” என்று கூறி, அவற்றை பட்டியலிட்டார்.
“அதன் படி,
- இல்லம் தேடிக் கல்வியாக இருந்தாலும் சரி,
- மக்களைத் தேடி வரக்கூடிய மருத்துவமாக இருந்தாலும் சரி,
- நான் முதல்வன் என்கிற திட்டமாக இருந்தாலும் சரி,
- இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 என்கிற திட்டமாக இருந்தாலும் சரி,
- சமத்துவபுரங்களாக இருந்தாலும் சரி,
- உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டமாக இருந்தாலும் சரி,
- கிட்டதட்ட 2000 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கக்கூடிய பணிகளாக இருந்தாலும் சரி,
திமுக தேர்தல் அறிக்கையில் என்னென்ன வாக்குறுதிகளை குறிப்பிடப்பட்டதோ, அந்த வாக்குறுதிகளை மட்டுமில்லாமல், சொல்லாத பல வாக்குறுதிகளையும் செய்து முடித்திருக்கக்கூடிய ஆட்சி தான் நம்முடைய ஆட்சி” என்று, முதல்வர் குறிப்பிட்டார்.
“நான் சட்டமன்றமாக இருந்தாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும், அதிகாரிகளை அழைத்துப் பேசக்கூடிய கூட்டங்களாக இருந்தாலும், ஆய்வு நடத்தக் கூடிய கூட்டங்களாக இருந்தாலும், பொது நிகழ்ச்சிகளாக இருந்தாலும் தொடர்ந்து நான் சொல்லிக் கொண்டிருப்பது இது என்னுடைய ஆட்சி என்று நான் சொல்லமாட்டேன், நம்முடைய ஆட்சி என்று தான் நான் சொல்வேன்” என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், “மகளிருக்கு வழங்கப்பட்டிருக்கக் கூடிய பேருந்து கட்டண சலுகை திட்டத்தால் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியிலனப் பெண்கள் அதிகளவிற்கு பயன்பெறக் கூடிய அளவிற்கு திட்டம் தற்போது நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது” என்றும், அவர் கூறினார்.
“வேலைக்குப் போகக்கூடிய பெண்களின் அன்றாடச் செலவில் பெரும் சுமையை நாம் குறைத்து இருக்கிறோம் என்றும், நான் புள்ளி விவரத்தோடு சொல்ல வேண்டுமென்றால், ஒவ்வொரு பெண்ணுக்கும் சராசரியாக 600 ரூபாயிலிருந்து 1200 ரூபாய் வரை மிச்சமாகக்கூடிய சாதனையை நாம் செய்து முடித்திருக்கிறோம்” என்றும், முதல்வர் பெருமையோடு கூறினார்.
“இப்படி மிச்சமாகும் பணத்தைச் சேமித்து வைத்து அந்தப் பெண்கள் அதை என்ன செய்வதாக சொல்கிறார்கள் என்றால், அன்றாடச் செலவிற்கு இல்லை என்ற நிலையில் இருக்கும் பெண்கள் சேமிக்கக்கூடியவர்களாக மாறியிருக்கிறார்கள் என்று பெருமையோடு சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு அவர்கள் முன்னேறியிருக்கிறார்கள்” என்றும், முதல்வர் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டினார்.