சென்னை வியாசர்பாடியில் மனவளர்ச்சி குன்றிய மாணவியை அடித்து ஆசிரியை சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள வியாசர்பாடி பகுதியில் வசித்து வருபவர் திவ்யா. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அவருக்கு 10 வயதில் மகனும், 6 வயதில் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி மகளும் உள்ளனர். கடந்த 4-ம் தேதி தான், பெரம்பூரில் உள்ள சிறப்பு குழந்தைகளுக்கான தனியார் பள்ளியில் மகளை திவ்யா சேர்த்துள்ளார். அதனைத்தொடர்ந்து சிறுமியின் தாத்தா கலைச்செல்வன், காலை 9.30 மணிக்கு சிறுமியை பள்ளியில் விட்டுவிட்டு மீண்டும் மதியம் 12.30 மணிக்கு வீட்டுக்கு அழைத்து வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் குழந்தையின் தாத்தா வழக்கம்போல், நேற்று மதியம் சிறுமியை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக கலைச்செல்வன் பள்ளிக்குச் சென்றுள்ளார். அப்போது அவரிடம் ஆசிரியை கவிதா , சிறுமியின் கை மற்றும் கால்களில் காயம் இருப்பதாக காட்டியுள்ளார். மேலும் இவ்வளவு காயங்களுடன் சிறுமியை பள்ளிக்கு ஏன் அனுப்புகிறீர்கள் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதனைக்கேட்டு சிறுமியின் தாத்தா அதிர்ச்சியடைந்த கலைச்செல்வன் காலையில் வீட்டில் இருந்து வந்தபோது சிறுமி நலமுடன் இருந்ததாகவும், அவருக்கு எந்த காயங்களுடம் இல்லை என்று தெரிவித்தார். மேலும் இந்த காயங்கள் பள்ளியில் தான் ஏற்பட்டிருக்க வேண்டும் என ஆசிரியையிடம் கலைச்செல்வன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
மேலும் அதன் பின்னர் சிறுமியை பரிசோதித்த போது அவரது வலது கணுக் கால், இடது கணுக்கால் மற்றும் வலது மணிக் கட்டில் சூடு வைக்கப்பட்ட தீக்காயங்கள் இருந்தது தெரியவந்தது. இதனை அறிந்த சிறுமியின் தாய் திவ்யா பள்ளிக்கு வந்து ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ஆத்திரத்தில் வகுப்பறையில் இருந்த கண்ணாடி ஜன்னல்களையும் அவர் தலையால் முட்டி உடைத்திருக்கிறார். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது. பின்னர்ட் இது குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் சிறுமியை மீட்டு பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியின் தாய் திவ்யா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.