ஆந்திர மாநிலத்தின் புதிய அமைச்சரவையில் இன்று நடிகை ரோஜா அம்மாநில அமைச்சராக பதவி ஏற்கிறார்.
ஆந்திராவில் கடந்த 2019-ம் ஆண்டு முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார். கொரோனா காரணமாக அமைச்சரவை மாற்றத்தில் சற்று தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த 24 அமைச்சர்கள் தற்போது ராஜினாமா செய்த நிலையில் புதிதாக அமைச்சர்கள் இன்று பதவியேற்கின்றனர்.
அந்த வகையில் புதிய அமைச்சர்கள் பட்டியலில் நகரி தொகுதி எம்எல்ஏவும், நடிகையுமான ரோஜா இடம் பெற்றுள்ளார். இன்று காலை 11 மணி அளவில் ரோஜா உட்பட 24 அமைச்சர்கள் அமராவதிக்கு அருகில் உள்ள வெலகபுடியில் உள்ள தலைமை செயலகத்தில் இன்று பதவியேற்கின்றனர்.
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தவுடன் ரோஜாவுக்கு அமைச்சர் பதவி அல்லது துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று சொல்லப்பட்ட நிலையில் அவருக்கு எதிர்பார்த்த பொறுப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்தனர். தற்போது அவருக்கு எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை பொறுப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் நடிகை ரோஜா ஆந்திரா அமைச்சராக இன்று பதவி ஏற்கிறார். அரசியல்வாதியாக அவதாரம் எடுத்த ரோஜா பின்னர் சட்டமன்ற உறுப்பினராக பதவி உயர்வு பெற்று ஆந்திர மாநில தொழில்துறை உள்கட்டமைப்பு தலைவராக பணியாற்றி வந்தார். முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நம்பிக்கைக்குரிய ஒருவராக உள்ள இவர் தற்போது அமைச்சரவையில் இடம் பெற்றிருப்பது அவரது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதன்பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்கள், ஏற்கனவே முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்தபடி புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் விதமாக எங்களை அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி நாங்கள் முழு மனதுடன் ராஜினாமா செய்துள்ளனர். மேலும் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த மூன்று ஆண்டுகளில் செய்த நல திட்டங்கள் மக்களுக்கு கொண்டு சென்று 2024-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் கட்சியை பலப்படுத்தி ஆட்சிக்கு வரவேண்டும். அவ்வாறு வரும்பொழுது தற்பொழுது ராஜினாமா செய்த அனைவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
மேலும் அதனைத்தொடர்ந்து ஏற்கனவே இருந்த அமைச்சரவையில் 5 துணை முதல்வர்கள் பதவி வகித்த நிலையில் அதே போன்று தற்போதும் துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு 7 பேர் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு இருந்த நிலையில் புதிய அமைச்சரவையில் 8 முதல் 9 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும். தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு 5 பேருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தற்போது புதிய அமைச்சரவையில் 6 பேருக்கு வாய்ப்பு வழங்கவுள்ளது, 13 பெண் எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் ஒரு துணை முதல்வர் உள்பட 3 அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. புதிய அமைச்சரவையில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக ஐந்து பெண்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட இருப்பதாக ஆளும் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.