உக்ரைனில் இருந்து செல்ல நாயை உடன் அழைத்து வர அனுமதி மறுக்கப்பட்ட கல்லூரி மாணவர் ஹங்கேரி வழியாக இந்தியா வந்தடைந்து உள்ளார்.
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 9வது நாளாக நீடித்து வருகிறது. இதில், இரு நாட்டு தரப்பிலும் பலர் உயிரிழந்து உள்ளனர். போரை முன்னிட்டு லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து வெளியேறி வருகின்றனர். அவர்களில் இந்தியர்களும் அடங்குவர். மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி ஆகிய நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் உக்ரைன் சின்னாபின்னமாகி வருகிறது. அங்கு ஏவுகணை, பீரங்கி தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் பதற்றத்தால் உக்ரைனில் வாழும் மக்கள் அகதிகளாக அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். கல்வி, வேலைவாய்ப்புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்தனர்.
இதில் குறிப்பாக தமிழகத்தில் இருந்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் உக்ரைன் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், என்ஜினீயரிங் படித்து வருகிறார்கள். மெட்ரோ சுரங்கங்களிலும், பதுங்கு குழிகளிலும் பதுங்கி உயிரை கையில் பிடித்துக்கொண்டிருந்த அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. உக்ரைன் வான்பகுதி மூடப்பட்ட நிலையில், அண்டை நாடுகளின் எல்லைக்கு வரவழைத்து இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. ‘ஆபரேசன் கங்கா’ என்ற பெயரில் இந்த மீட்புப்பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் உக்ரைனில் படித்து வந்த மாணவர் ஒருவர் தனது செல்ல பிராணியை உடன் அழைத்து வருவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது. ரிஷாப் கவுசிக் என்ற மாணவர் கார்கிவ் தேசிய பல்கலை கழகத்தில் மென்பொருள் பொறியாளருக்கான பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்தியாவின் டேராடூன் நகரை சேர்ந்தவரான கவுசிக் தன்னுடன் மலிபூ என்ற நாயை செல்ல பிராணியாக வளர்த்து வந்துள்ளார். உக்ரைனில் இருந்து நாடு திரும்பும்போது அதனையும் உடன் அழைத்து வர விரும்பியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து அதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. செல்ல பிராணியை அழைத்துவர இந்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தனது வேதனையை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இவரது வீடியோவை கண்ட விலங்குகளுக்கான நல அமைப்பு (பீட்டா), வளர்ப்பு பிராணிகளை விமானத்தில் தங்களுடன் அழைத்து வர இந்தியர்களுக்கு அனுமதி அளிக்கும்படி வலியுறுத்தியது.
மேலும் தொடர்ந்து மத்திய அரசு, விதிகளில் தளர்வு அளித்தது. இதன்படி, வளர்ப்பு பிராணிகளை இந்தியர்கள் அழைத்து வர அனுமதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 219 இந்தியர்களுடன் ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் கவுசிக் தனது செல்ல நாயுடன் பயணித்து இந்தியா வந்தடைந்து உள்ளார்.