கர்நாடக மாநிலம் ஹூப்ளி நகரில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த இளைஞர் மெக்கா மசூதியில் காவிக்கொடி பறக்கும் சர்ச்சைக்குரிய வீடியோ வெளியானதால் போராட்டம் வெடித்தது.
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கர்நாடகாவில் உள்ள இந்துத்துவா அமைப்பினர்கள் இந்து கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களில் இஸ்லாமியர்கள் வணிகம் செய்ய அனுமதி கிடையாது என்றும் ஹலால் மாமிசத்தை இந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்றும் மசூதிகளில் ஒலி பெருக்கியை தடை செய்ய வேண்டும் என்றும் பல்வேறு சர்ச்சைக்குரிய பிரச்சாரங்களை முன்னெடுத்து வைத்தனர்.
உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு பி.யூ. கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ‘ஹிஜாப்’ அணிந்து வர கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவ-மாணவிகள் காவி துண்டு, தலைப்பாகை அணிந்து போராட்டம் நடத்தினர். இதனால் வன்முறை ஏற்பட்டது.
இதற்கிடையில் கர்நாடக ஐகோர்ட்டு மத அடையாளங்களை வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வகுப்பிற்கு வருவதற்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு அளித்தது. மேலும் அப்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வந்தனர். இதைப்பார்த்த கல்லூரி தலைமை ஆசிரியர்கள் மற்றும் போலீசார் மாணவிகளிடம் ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்புக்குள் செல்லும்படி தெரிவித்தனர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து மாணவிகள் தரப்பில் கர்நாடக ஐகோர்ட்டி வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதை தொடர்ந்து ஐகோர்ட்டு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும்' என தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாதகிரியில் முஸ்லிம் மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர்.
இந்நிலையில் ஹலால் மாமிசத்தை இந்துக்கள் வாங்கக்கூடாது என பஜ்ரங் தள் அமைப்பினர் கர்நாடக மாநிலத்தில் பல இடங்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு வெளியிட்டு 24 மணி நேரத்திற்குள் ஹலால் மாமிசம் வழங்கப் மறுத்த கடைக்காரர் மீதும் உணவக உரிமையாளர் மீதும் இந்துத்துவா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் இந்துத்துவா அமைப்பினர்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் கடைகளுக்குச் சென்று ஹலால் இல்லாத மாமிசத்தை வழங்கவேண்டும் ஹலால் இல்லாத உணவை பரிமாற வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது கடைக்காரர்கள் ஹலால் இல்லாமல் செயல்படும் கடைகளுக்கு சென்று தங்களுக்கு தேவையானதை வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறிய நிலையில், இரண்டு கடை உரிமையாளர்கள் மீது இந்துத்துவ அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹொசா மனை என்ற பகுதியில் தோசிப் என்ற மாமிச கடைக்காரர் மீதும் பலைய பத்ராவதி பகுதியில் உள்ள உணவக உரிமையாளர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் காவல்துறையிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்த நிலையில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்த ஐந்து நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்பொழுது இந்தியாவில் தற்போது மதம் சார்த்த வெறுப்புணர்வு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத், மத்திய பிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் மதக் கலவரங்கள் மத மோதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் தற்போது தலைநகர் டெல்லியிலும் மோசமான மதக்கலவரம் அங்கேறியிருக்கிறது. நேற்று டெல்லி ஜஹாங்கீர் பகுதியில் நடைபெற்ற அனுமன் ஜெயந்தி விழாவில், இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. அனுமன் சிலை வைப்பது தொடர்பாக ஏற்பட்ட இந்த மோதலில் இரு தரப்பினரும் மாறி மாறி கல்வீச்சுத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
மேலும் இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு காவல்துறையினரும் விரைந்து வந்தனர். ஆனால் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் காவல்துறையினர் மீதும் கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதில் பல போலீஸார் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை தாக்குதலில் அங்கிருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், வாகனக்களும் தீ வைத்து கொளுத்தப்பட்டன. காயமடைந்த அனைவரும் பாபு ஜாக்விஜீவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். டெல்லியில் அரங்கேறிய வன்முறை சம்பவம் தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பதைக்க வைக்கின்றன.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளி மாவட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர், தனது சமூக வலைதளங்களில் மெக்கா மசூதியில் காவிக்கொடி பறக்கும் வகையில் கிராபிக்ஸ் செய்த சர்ச்சைக்குரிய வீடியோவை நேற்று பதிவு செய்துள்ளார். குறிப்பிட்ட வீடியோவில் இது இந்து ராஜ்யம் நாம் ரத்தம் சிந்தினால் இங்கு கூட காவிக் கொடியை பறக்க விட முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில் குறிப்பிட்ட இளைஞனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அதனைத்தொடர்ந்து இந்த வீடியோவை பதிவுக்கு எதிராக இஸ்லாமியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு பழைய ஹூப்ளி காவல் நிலையம் எதிரே ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கல்வீச்சு சம்பவம் பதிவானது. இதில் காவல்துறை வாகனங்கள் சேதம் அடைந்து காவல்துறை ஆய்வாளர் மண்டை உடைந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி, கண்ணீர் புகை குண்டு வீசி வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கலைத்தனர். நிலைமை கட்டுக்குள் வந்த பிறகு ஹூப்ளி நகர் முழுவதும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கல்வீச்சு மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியது என 20 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.