பீஹாரில் ஒரே இரவில் 500 டன் எடை கொண்ட இரும்பு பாலம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வடிவேலு பாணியில் பாலத்தைக் காண வில்லை என ஊர் மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
திருட்டு என்பது பொதுவாக நகைகள், பணம் , செல்ஃபோன் போன்றவை திருடு போவதை கேள்விபட்டிருப்போம். அதைத்தாண்டி பைக், கார் போன்ற வாகனங்கள் திருடப்படுவதை அறிந்திருப்போம். ஏன் சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில் காணாமல் போனதாக செய்திகள் வெளியாகின. ஆனால் 500 டன் எடை கொண்ட பாலத்தையே ஒரே இரவில் ஒரு கும்பல் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பீஹாரில் அரங்கேறியிருக்கிறது. ரோக்தாஸ் மாவட்டம் சாசரம் அருகே அமியாவார் என்கிற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கால்வாய் ஒன்றின் குறுக்கே 69 அடி நீள இரும்பு பாலம் ஒன்று உள்ளது.
இந்நிலையில் இந்த பாலம் 45 ஆண்டுகள் பழைமையானது என்பதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதன் அருகே புதிய சிமெண்ட் பாலம் அமைக்கப்பட்டது. பயன்பாட்டில் இல்லாத இந்த இரும்பு பாலத்தை அகற்றுவதற்காக , கடந்த சில நாட்களாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் எனக் கூறிக்கொண்டு ஒரு கும்பல் பாய்வையிட்டு சென்றுள்ளனர். இதற்காக வெல்டிங் இயந்திரங்கள், மண் அள்ளும் இயந்திரங்கள், உதவியுடன் பாலத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஆனால் ஊர்மக்கள் நேற்று காலை எழுந்து பார்த்தபோது, பாலம் காணாமல் போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்கு 500 டன் எடை கொண்ட பாலம் ஒரே இரவில் முழுவதுமாக காணாமல் போனது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அத்துடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் என கூறி அங்கிருந்த அந்த கும்பலையும் காணவில்லை. இதனையடுத்து ஊர்மக்கள் பொதுப்பணித்துறையிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது பாலத்தை இரவோடு இரவாக பெயர்த்தெடுத்துச் சென்றது கொள்ளை கும்பல் என்பது தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து ஊர் மக்கள் காவல் நிலையத்தில் பாலத்தை காணவில்லை என புகார் அளித்துள்ளனர். மாபியா கும்பல் தான் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி இருக்கலாம் என போலீசார் சந்தேக்கின்றனர்.