IPL2022: பேட்டிங்கில் வச்சு செய்த லிவிங்ஸ்டனின் காட்டுத்தனமான சிக்சர்! குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த பஞ்சாப்!
#IPL2022 சீசனில் பேட்டிங்கில் வச்சு செய்த லிவிங்ஸ்டனின் காட்டுத்தனமான சிக்சர் மழையால், #GT குஜராத்தின் தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த #PBKS பஞ்சாப் அணி அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.
#IPL2022 15 வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், நேற்றைய தினம் நடைபெற்ற 48 வது லீக் போட்டியில் #PBKS - #GT அணிகள் மோதின.
இதில், டாஸ் வென்ற #GT குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் படி, #GT அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் 9 ரன்களில் வெளியேற, சாஹா - சாய் சுதர்ஷன் ஜோடி நிதானமாக விளையாடினர்.
அப்போது, ரபாடாவின் புயல் வேக பந்துவீச்சில் சாஹா, 21 ரன்களில் வெளியேற, அடுத்து வந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா 7 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
ஒரு புறம் விக்கெட்டுக்கள் விழுந்த வண்ணம் இருந்த நிலையில் மறுபுறம் நிதானமாக விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 42 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்திக்கொண்டிருந்தார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறிக்கொண்டிருந்தனர். ரஷித் கான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.
என்றாலும், தமிழகத்தைச் சேர்ந்த சாய் சுதர்சன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தார்.
இதனால், #GT குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே சேர்த்தது. #PBKS பஞ்சாப் அணி தரப்பில் ரபாடா 4 விக்கெட்களை எடுத்து கலக்கினார்.
இதனையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் #PBKS பஞ்சாப் அணி சார்பில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - பேர்ஸ்டோவ் ஜோடி களமிறங்கினர். இதில், பேர்ஸ்டோவ் ஒரு ரன்களில் வெளியேற களத்திற்கு வந்த ராஜபக்சா உடன் தவான் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினார். ஷிகர் தவான் அரைசதம் எடுத்து அசத்தினார்.
பின்னர், அதிரடியாக விளையாடிய ராஜபக்சா 5 பவுண்டரி, 1 சிக்சருடன் 28 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதன் தொடர்ச்சியாக,
பின்னர் வந்த லியாம் லிவிங்ஸ்டனால், ஆட்டமே அடுத்த சில நிமிடங்களில் முடிவுக்கு வந்தது.
அதாவது, #GT வீரர் ஷமி வீசிய 16 வது ஓவரில் தொடர்ந்து 3 சிக்சர்களை அடுத்தடுத்து லியாம் லிவிங்ஸ்டன் பறக்கவிட்டு வானவேடிக்கை காட்டினார்.
லியாம் லிவிங்ஸ்டன் களத்தில் இறங்கிய போது, 30 பந்தில் 27 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. ஆனால், அவர் தனக்கு 6 பந்து போதும் என்று முடிவு கட்டிவிட்டுதான் களத்திற்கே வந்தார் போல.
அப்போது, ஷமி வீசிய 16 வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸ் பறந்த நிலையில், அதனை பந்து வீசிய ஷமியே பார்த்து பிரமித்து போகும் அளவுக்கு அந்த தூர உயரம் இருந்தது. மிக உயரமாக மேலே சென்ற அந்த பந்தானது, சரியாக 117 மீட்டர் தூரத்திற்கு பறந்து, அந்த மைதானத்தின் டாப் சுவரின் மீது விழுந்தது.
பின்னர், அடுத்தடுத்த பந்துகளை எதிர்கொண்ட லியாம் லிவிங்ஸ்டன், அந்த ஓவரில் 6, 6,6, 4,2,4 என மொத்தமாக 28 ரன்களை லிவிங்ஸ்டன் விளாசி, காட்டுத்தனமான சிக்சர்களை பறக்கவிட்டதுடன், #GT குஜராத் அணியின் பவுலிங்கை தனது பேட்டிங்கில் வச்சு செய்தார்.
இதன் மூலமாக, வெறும் 16 ஓவர்களில் #PBKS பஞ்சாப் அணி 2 விக்கெட்களை மட்டுமே இழந்து ,145 ரன்கள் சேர்த்து, அசத்தலான வெற்றியை பெற்றது. இதன் மூலமாக, குஜராத் அணியை 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, #PBKS பஞ்சாப் அணி 5 வது வெற்றியை இந்த சீசனில் பதிவு செய்து உள்ளது.
குறிப்பாக, தொடர்ந்து வெற்றிகளை குவித்து வந்த #GT குஜராத் அணி, இந்த தோல்வியின் மூலமாக, நடப்பு தொடரில் 2 வது தோல்வியை சந்தித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று மாலை நடைபெறும் போட்டியில், #CSK சென்ன சூப்பர் கிங்ஸ் - #RCB பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இதனால், இன்றைய போட்டிகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன.