தங்கக்கட்டிக்காக வாலிபரை விடுதியில் அடைத்து கொடுமை.. கடத்தல் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

தங்கக்கட்டிக்காக வாலிபரை விடுதியில் அடைத்து கொடுமை.. கடத்தல் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு! - Daily news

துபாயிலிருந்து ஒரு  கிலோ தங்க கட்டிகளை கொண்டு வந்து கடத்தல் கும்பலிடம் ஒப்படைக்காததால் வாலிபரை விடுதியில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்லப்பன் அவரது வயது 28. இவர் துபாயில் பெயிண்டிங் வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர், கடந்த ஜனவரி மாதம் 29-ம் தேதியன்று துபாயிலிருந்து ஊருக்கு செல்வதற்காக விமான நிலையத்தில் தயாராக இருந்தார்.

இந்நிலையில் அருண் பிரசாத் என்பவர் செல்லப்பனிடம் அறிமுகமாகி ஒரு கிலோ தங்க கட்டிகளை குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள ஒரு நபரிடம் ஒப்படைத்தால் ரூ.1 லட்சம் கமிஷனாக கொடுப்பதாக தெரிவித்திருக்கிறார்.

அதனைத்தொடர்ந்து தங்க கட்டிகளை செல்லப்பன் தனது ஆசனவாயில் பதுக்கி வைத்து விமானத்தில் கடத்தி வந்த நிலையில், அதில் வலி ஏற்பட்டு ரத்தம் வரவே உடன் பயணம் செய்த கேரள மாநிலத்தை சேர்ந்த அனிஷ் குமார் என்பவரிடம் தங்க கட்டிகளை ஒப்படைத்து விட்டு செல்லப்பன் சென்னை வந்து இறங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த இடத்திற்கு வந்த 7 பேர் கொண்ட கும்பல் செல்லப்பனிடம் தங்கத்தை எங்கே என கேட்டு தங்கத்தை பெற்று சென்ற அனிஷ் குமாரை கண்டுபிடிக்க கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கும் அவரை அழைத்துச்சென்று தேடி வந்துள்ளனர். 

மேலும் இதை தொடர்ந்து அனீஷ்குமாரை கண்டுபிடிக்க முடியாத நிலையில் சென்னை மண்ணடி அங்கப்ப நாயக்கன் தெருவில் உள்ள விடுதியில் சுமார் 45 நாட்களாக செல்லப்பனை அடைத்து வைத்து அடித்து சித்ரவதை செய்ததாக தெரிகிறது. 

சித்தரவதை செய்ததில் செல்லப்பன் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டார், அதன்பிறகு அந்த கடத்தல் கும்பல் பழைய மகாபலிபுரம் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து விட்டு தப்பி சென்றதாக தெரிகிறது.
 
அதனைத்தொடர்ந்து செல்லப்பனுக்கு  சிகிச்சையளிக்கும் மருத்துவமனை நிர்வாகம் வடக்கு கடற்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சென்னை வடக்கு கடற்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் போலீஸ் விசாரணையில் கடத்தல் கும்பலை சேர்ந்த மண்ணடியை சேர்ந்த முகமது இந்தியாஸ் வயது 27  என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றவர்களை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment