இந்தியாவில் கொரோனா 2 வது அலை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், டெல்லியில் 13,450 கோடி ரூபாய் செலவில் பிரதமர் மோடியின் சொகுசு வீடு கட்டப்படும் விவகாரம், மிகப் பெரிய அதிர்ச்சியையும், கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 அலை மிகப் பெரிய அளவில் உச்சத்தில் இருந்து வருகிறது. இதனால், கொரோனா நாடு முழுவதும் ஏற்படுத்தும் விளைவுகள் மிகப் பெரிய அளவில் யாரும் நினைத்துப் பார்க்காத வகையில் இருந்து வருகிறது.
அத்துடன், நாட்டிலேயே வட மாநிலங்களில் மிக அதிகப்படியான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, மக்கள் உயிருக்காகப் போராடி வருகின்றனர். இந்தியாவின் இந்த இக்காட்டான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு, உலக நாடுகள் மற்றும் பல்வேறு தரப்பினரும் மத்திய - மாநில அரசுகளுக்குத் தொடர்ந்து பல்வேறு உதவிக்கரங்களை நீட்டி வருகின்றனர்.
அதன்படி அமெரிக்கா, பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நட்பு நாடுகளும், இந்தியாவிற்குத் தாமாக முன்வந்து பல்வேறு உதவிகளை அடுத்தடுத்து செய்து வருகின்றன.
இப்படியாக, இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா தவித்து வரும் நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடத்துடன் பிரதமருக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் வீடு கட்டுவது தற்போது நடைபெறுவதாகவும் செய்திகள் வெளியாகி, அது மிகப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பால், இந்தியாவிற்கு தற்போது மிகப் பெரிய அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் தேவை வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து இருக்கிறது.
முக்கியமாக, டெல்லியில் பிரதமரின் புதிய இல்லமானது 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டுப்பட்டு வருவதற்கு, முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி முதல் நடிகர் பிரகாஷ் ராஜ் வரை மிக கடுமையான விமர்சனங்களை முன் வைத்து உள்ளனர்.
இதற்கு, பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்களால் பதில் சொல்ல முடியாமல் இருந்து வருகின்றனர். எனினும், ஒரு சிலர் மட்டும் பிரதமர் மோடிக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய வீ்ட்டை கட்டுவதற்கு நியாயம் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய அரசு கட்டி வரும் “புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை விமர்சித்து டிவீட் செய்து உள்ளார்.
அதன் படி, “பிரதமர் நரேந்திர மோடி சுமார் 13,450 கோடி ரூபாய் மதிப்பில் தனக்காகப் பிரமாண்டமாக புதிய மஹாலை கட்டி வருகிறார்” என்று, குறிப்பிட்டு உள்ளார்.
“இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில், இதற்கு செலவழிக்கப்படும் பணத்தைக் கொண்டு 45 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டியிருக்க முடியும் என்றும், ஒரு கோடி ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்கி இருக்க முடியும்” என்றும், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டி உள்ளார்.
முக்கியமாக, “40 மெகா கொரோனா மருத்துவமனைகளைக் கட்டியிருக்க முடியும் என்றும். இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு 6000 கோடி நிவாரணம் வழங்கி இருக்க முடியும் என்றும், ஆனால் இதை எதையுமே செய்யாமல், மக்கள் மேல் அக்கறையற்று புத்தம் புதிய மஹாலை தனக்காகக் கட்டிக் கொண்டிருக்கிறார் மோடி” என்றும், மிக கடுமையாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், விமர்சனம் செய்திருக்கிறார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடி சுமார் 13,450 கோடி ரூபாய் செலவில் தனக்கென்று மிக பிரமாண்டமான புதிய மஹாலை கட்டிவருவது குறித்து, மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது, அதிகம் பேரால் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் பலரும் பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.