“தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காதது ஏன்?” என்று, தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் அதிரடியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் 31,400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக, சென்னை வருகை தந்த பிரதமர் மோடி, பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் தமிழக ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
அதே நேரத்தில், இந்த விழாவில் காணொலி மூலமாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவின் தொடக்க நிகழ்வாக, “தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது” அதுவும், பிரதமர் மோடி முன்னிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தமிழ்நாடு இசைக்கல்லூரி மாணவர்கள் பாடினர்.
அப்போது, இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, முதல்வர் உட்பட அனைவரும் எழுந்து நின்றனர்.
ஆனால், காணொளி மூலமாக பங்கேற்ற மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மட்டும் எழுந்து நிற்கவில்லை. மாறாக, அவர் தனக்கான இருக்கையில் கடைசி வரையில் அமர்ந்தே இருந்தார் என்கிற குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் இந்த செயல், தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையான நிலையில், இது தொடர்பாக தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ் கருத்து தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், “தமிழ் தாய் பாடல் ஒலிக்கும் போது, எழுந்து நிற்காமல் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் அவமதித்து உள்ளார்” என்று, பதிவிட்டு உள்ளார்.
மேலும், “தன் ஆணவ பொறுப்பற்ற இந்த செயலுக்கான காரணத்தை, அமைச்சர் நிதின் கட்கரி, தமிழக மக்களுக்கு விளக்க வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தி உள்ளார்.
“கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் அவர் கலந்துக் கொண்ட விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தை புறக்கணித்ததும், நேற்று அவர் நடந்துக் கொண்ட விதமும் எதேர்சையாக நடந்ததாக தெரியவில்லை” என்றும், தமிழக அமைச்சர் மனோ தங்கராஜ், கடுமையாக விமர்சித்து உள்ளார்.
இதனிடையே, “தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது மத்திய அமைச்சர் நிதின் கட்கரி எழுந்து நிற்காத செயலுக்கு” பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.