“கல்யாணத்திற்கு பெண் தேவை” போஸ்டர் ஒட்டி பெண் தேடிய நம்ம ஊர் இளைஞன்!

“கல்யாணத்திற்கு பெண் தேவை” போஸ்டர் ஒட்டி பெண் தேடிய நம்ம ஊர் இளைஞன்! - Daily news

“கல்யாணத்திற்கு பெண் தேவை” என்று, ஊர் முழுக்க போஸ்டர்கள் ஒட்டி நம்ம ஊர் இளைஞர் ஒருவர் பெண் தேடிய சம்பவம், இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

மதுரை மாநகரில் தான் இப்படி ஒரு பரபரப்பு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மதுரை மாநகரம் எப்போதுமே அரசியலுக்கும், சினிமா போஸ்டர்களாலும் நிரம்பி வழிவது வழக்கம். மதுரையில் எந்த திசை திரும்பினாலும் பெரும் அரசியல் சண்டைதொடர்பாக பழிக்கு பழியாக வசனங்களில் திக்குமுக்காட வைக்கும் அளவிற்கு போஸ்டர்களும் அதிக அளவில் காணப்படும். 

அந்த வகையில், அந்த அரசியல் சண்டை போஸ்டர்களை மிஞ்சும் அளவுக்கு தற்போது மதுரையில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அதாவது, மதுரை வில்லாபுரம் அருகே உள்ள மீனாட்சி நகரைச் சேர்ந்த 27 வயதான ஜெகன், படித்து முடித்து விட்டு அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இந்த இளைஞன், மாத வருமானமாக 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிப்பதுடன், தனக்கு சொந்தமாக நிலமும் வைத்து இருக்கிறார்.

இந்த சூழலில் தான், ஜெகனுக்கு கடந்த 4 ஆண்டுகளாக அவர்களது வீட்டில் வரன் பார்த்து வந்துள்ளனர். ஆனாலும், அவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில், மதுரை மாநகர் புறநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் உள்ளிட்ட அங்கு உள்ள பல்வேறு பகுதிகளில் “மணமகள் தேவை” என்று, ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து பெண் தேடும் படலத்தை துவங்கி இருக்கிறார்.

இது தொடர்பான போஸ்டர்களை பலரும் போட்டோ எடுத்து, இணையத்தில் வெளியிட்டு உள்ளனர். இதனால், இந்த போஸ்டர் தற்போது வைரலாகிக்கொண்டு இருக்கிறது.

இது குறித்து சம்மந்தப்பட்ட இளைஞன் ஜெகன் கூறும்போது, “நான் தனியார் நிறுவனத்தில் மேலாளராகவும், பகுதி நேர வேலையாக பிரியாணி கடையிலும், மாமதுரை பப்ளிசிட்டி என்ற நிறுவனத்தில் போஸ்டர் ஒட்டும் பணியையும் செய்து வருகிறேன். பல பேருக்கு போஸ்டர் அடித்து ஒட்டும் நான், எனக்காக ஒரு போஸ்டர் ஒட்ட முடிவு செய்து இதை செய்துள்ளேன்.  இந்த போஸ்டரை பார்த்து பல பேர் கேலி, கிண்டல் செய்து தொலைபேசியில் பேசுவார்கள். ஆனால், நான் அதை கண்டுகொள்ளவில்லை” என்றும், வெளிப்படையாகவே கூறி உள்ளார்.

அத்துடன், “கடந்த 4 வருடமாக எனக்கு பெண் பார்த்தும், ஒரு வரன் ஒன்று கூட அமையவில்லை. பெண் பார்க்கும் தரகர்கள் ஜாதகம் மற்றும் பணத்தை வாங்கிச் செல்வார்கள். ஆனால்ஈ ஒரு பெண்ணை கூட அவர்கள் காட்டவில்லை. இது தரகர்களுக்கான சோதனையல்ல, என்னை மாதிரியான 90ஸ் கிட்ஸ்களுக்கு வந்த சோதனையோ? என்று, நினைக்கத் தோன்றுகிறது” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக, “போஸ்டரைப் பார்த்து பெண்கள் தொடர்பு கொள்வார்கள் என்று பார்த்தால், மீண்டும் தரகர்களே என்னை தொடர்பு கொள்கிறார்கள்” என்றும், அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டு உள்ளார்.

Leave a Comment