ஐபிஎல் வரலாற்றிலேயே இது ரொம்ப புதுசு... அதிக தொகைக்கு ஏலம் போகும் கே.எல். ராகுல்... இத்தனை கோடி கொடுத்து வாங்கும் அணி!
பஞ்சாப் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுலை ரூ. 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டுக்கான ஐபிஎல் 14 -வது சீசன் பாதி போட்டிகள் இந்தியாவிலும், பின்னர் கொரோனா காரணமாக பாதி போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்திலும் நடைபெற்றது. இந்தப் போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த வருடம் முதல் அகமதாபாத், லக்னோ நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைவதாக பிசிசிஐ அறிவித்தது. இதற்கான ஏலத்தில் லக்னோ அணியை ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. அகமதாபாத் அணியை சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேப்பிடல் ரூ. 5,600 கோடிக்கு சொந்தமாக்கியுள்ளது.
இதனால் 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் 15-வது சீசனில் ஏற்கனவே உள்ள 8 அணிகளுடன், 2 அணிகள் சேர்ந்து மொத்தம் 10 அணிகள் களம் காண்கின்றன. அதனால் அடுத்த சீசனுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் அல்லது ஜனவரி மாதத்தில் நடக்க உள்ளது.
அனைத்து அணிகளும் தலா 4 வீரர்களை தக்கவைத்துக்கொண்டு மற்ற வீரர்களை விடுவிக்க வேண்டும் என்று பிசிஐ கூறியுள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள 2 அணிகளும், ஏலத்திற்கு முன்பாக 3 வீரர்களை எடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாளைக்குள் (நவம்பர் 30) ஐபிஎல் அணிகள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என்பதால், ஐபிஎல் அணிகள் பட்டியலைத் தீவிரமாகத் தயாரித்து வருகின்றன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து விலகிய டேவிட் வார்னர் உட்பட பல பெரிய வீரர்கள் இந்த மெகா ஏலத்தில் இடம்பெறவுள்ளதால், இந்த மெகா ஏலம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் கே.எல்.ராகுல், இந்தாண்டு அந்த அணியில் இருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை தக்கவைக்க வேண்டுமென்றால் ரூ.16 கோடிக்கு தான் பஞ்சாப் அணி ஏலம் எடுக்க முடியும்.
ஆனால் கே.எல்.ராகுலை ரூ. 20 கோடிக்கு ஏலம் எடுக்க லக்னோ அணி அவரிடம் பேசி வருவதாக கூறப்படுகிறது. 2018 ஐபிஎல் ஏலத்தில் கே.எல்.ராகுலை ரூ.11 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடரில் கடந்த சில ஆண்டுகளாக சிறந்த தொடக்க ஆட்டக்காரராக செயல்பட்டு வருகிறார் கே.எல். ராகுல்.
ஐபிஎல் தொடரில் அருமையான ஃபார்மில் இருக்கும் கே.எல்.ராகுல், கடந்த 4 சீசன்களில் முறையே 659, 593, 670, 626 ரன்கள் எடுத்துள்ளார். லக்னோ அணியின் உரிமையாளர்கள் ராகுலை தொடர்பு கொண்டு ஐபிஎல் ஏலம் குறித்து பேசி முடித்து உள்ளதாகவும், இதற்கு கே.எல்.ராகுல் பஞ்சாப் அணியிலிருந்து விலகி லக்னோ அணிக்கு ஒப்புக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனான கே எல் ராகுல் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிய அணியான லக்னோ அணிக்கு கேப்டனாக நியமிக்கபட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் அதிக ரன்கள் குவித்த சிஎஸ்கே அணி வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டை விட 9 ரன்கள் தான் குறைவாக அடித்திருந்தார்.
இதற்கு முன்னதாக கடந்த ஐபிஎல் 13-வது சீசனில் 670 ரன்கள் எடுத்த கே.எல்.ராகுல் ஆரஞ்ச் கேப்பை கைப்பற்றி இருந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.