சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை உயிரினங்களை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தாய்லாந்து நாட்டில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடமைகளையும் சுங்க அதிகாரிகள் சோதனை செயதனர்.
இந்நிலையில் சென்னையை சேர்ந்த பயணியின் உடமைகளை சுங்க அதிகாரிகள் பரிசோதித்தபோது, அவர் அட்டைப்பெட்டி மற்றும் துணி கூடைக்குள் வெள்ளை நிற முள்ளம்பன்றி, டாமரின் மங்கி வெளிநாட்டு குரங்கு குட்டியையும் வைத்திருந்தார். இது குறித்து சுங்க அதிகாரிகள் அவரிடம் விசாரித்தபோது, அவர் வெளிநாட்டில் இருந்து வளர்ப்பதற்காக வாங்கி வருவதாக தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அவரிடம் விசாரித்ததில் அவரிடம் அதற்கான முறையான ஆவணங்கள் இல்லை. மேலும் வெளிநாட்டிலிருந்து வனவிலங்குகளை வாங்கி வரும்போது, அவர்கள் முறையாக சர்வதேச வன விலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, இந்திய வனவிலங்குப் பாதுகாப்பு துறையிடம் அனுமதி பெற வேண்டும். அந்த உயிரினங்களில் நோய்க்கிருமிகள் எதுவும் இல்லை என்ற மருத்துவ பரிசோதனை சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.
மேலும் அவரிடம் தகுந்த சான்றிதழ்கள் இல்லாததால் சுங்கதுறை அதிகாரிகள் வெள்ளை முள்ளம் பன்றியையும், குரங்கு குட்டியையும் பறிமுதல் செய்தனர். அதோடு சென்னையில் உள்ள மத்திய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து விலங்குகளை ஆய்வு செய்ததில் முறையான மருத்துவ பரிசோதனை இல்லாமல் குட்டிகளை கொண்டு வந்துள்ளதால் இந்த விலங்குகள் மூலம் வெளிநாட்டு நோய்க் கிருமிகள் நம் நாட்டு விலங்குகளுக்கும் பரவும் ஆபத்து இருப்பதாக கூறி , இதை மீண்டும் தாய்லாந்து நாட்டுக்கே திருப்பி அனுப்புவது என முடிவு செய்து திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த வன விலங்குகளை கடத்தி வந்தவரை சுங்க அதிகாரிகளும், மத்திய வனஉயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.