“இந்தி மொழி பற்றிய விவகாரம், பான் இந்தியா பஞ்சாயத்தாக மாறி இந்தியாவில் இரு பெரும் ஹீரோக்கள் முட்டிமோதிக்கொண்ட நிலையில், பாஜகவைச் சேர்ந்த மாநில முதலமைச்சர் ஒருவர், நடுநிலையாக கருத்து தெரிவித்தது இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் இந்தி திணிப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.
இதற்கு முன்பு, இந்தி மொழி எதிர்ப்பு விவகாரம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் மட்டும் உச்சம் தொட்டுக்கொண்டிருந்தது. ஆனால், தற்போது தமிழ்நாட்டைத் தாண்டி, கர்நாடகாவில் எதிரொலித்துக்கொண்டு இருக்கிறது.
அதவும், “இந்தி மொழி பற்றிய விவகாரம், பான் இந்தியா பஞ்சாயத்தாக மாறி, இந்தியாவில் இருக்கும் இரு பெரும் ஹீரோக்கள் கருத்து யுத்தம் நடத்தி, முட்டிமோதிக்கொண்ட நிலையும் தற்போது உருவாகி இருக்கிறது.
இந்த இந்தி மொழி பற்றிய யுத்தமானது, பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், தான் பற்ற வைத்திருக்கிறார்.
இது குறித்து இந்தி நடிகரான அஜய் தேவ்கன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “இந்தி மொழிதான், இந்தியாவின் தேசிய மொழி” என்கிற ரீதியில் பதிவிட்டு இருந்தார். இதனையடுத்து, இந்த விவகாரம் விஸ்ரூபம் எடுத்த நிலையில், இந்தி நடிகர் அஜய் தேவ்கனின் பதிவுக்கு ஆதரவாகவும் - எதிராகவும் பல்வேறு தரனப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
அதன்படி, கன்னட நடிகர் கிச்சா சுதீப் தெரிவித்த கருத்தில், “இந்தி, ஒரு போதும் தேசிய மொழி கிடையாது” என்கிற கருத்தை உயர்த்தி பிடித்தார்.
ஆனால், இதற்கு பதிலடி கொடுத்த இந்தி நடிகர் அஜய் தேவ்கன், “இந்தி இதற்கு முன்பும், இப்போதும், இனிமேலும் நமது தாய் மொழியாக, தேசிய மொழியாக இருக்கும்” என்று, கூறினார்.
அதன் தொடர்ச்சியாக, இதற்கு டிவிட்டரிலேயே பதில் அளித்த நடிகர் சுதீப், “நீங்கள் இந்தியில் அனுப்பியது எனக்குப் புரிந்தது. ஏனென்றால், நாங்கள் நேசித்து இந்தியை கற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருவேளை என்னுடைய பதிலை நான் கன்னடத்தில் பதிவிட்டிருந்தால், அதை உங்களால் எப்படிப் புரிந்துகொள்ள முடிந்திருக்கும்? நாங்களும் இந்தியாவில் தானே இருக்கிறோம்” என்று, பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தான், #StopHindiImposition என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிவிட்டரில் டிரெண்டான நிலையில், இதற்கு வட மாநிலங்களைத் தவிர, மற்ற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து யுத்தம் நடத்தி வந்தனர்.
அதன்படி, கர்நாடக முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்தில், “ஒரு போதும் இந்தியாவின் தேசிய மொழியாக இந்தி இருக்காது. நான் ஒரு கன்னடனாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். நாட்டின் மொழியியல் பன்முகத்தன்மையை மதிக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமை” என்று, பதிவிட்டார்.
அதே போல், கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி வெளியிட்ட கருத்தில், “ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு வரி, ஒரு அரசு என இந்து தேசியவாதத்தை முன்னிறுத்தும் பாஜக வின் ஊதுகுழலாக உளறுகிறார் அஜய் தேவ்கன்” என்று, அவர் காட்டமாக பதில் அளித்தார்.
அதன் தொடர்ச்சியாகவே, பாஜக வைச் சேர்ந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, “மொழிகளால் தான் நமது மாநிலங்கள் உருவாகின. பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நடிகர் சுதீப் கூறியது சரிதான், அதற்கு அனைவரும் மதிப்பளிக்க வேண்டும்” என்று, வெளிப்படையாகவே, பாஜகவின் தேசிய கொள்கைக்கு எதிராகவும், மாநில மொழியின் உரிமைக்காகவும் நடுநிலையாக இருந்து குரல் கொடுத்தார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை.